கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தால் பயனில்லை - குமுறும் விவசாயிகள்
கொரோனோவால் பாதித்துள்ள விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு திட்டம் வெற்று அறிவிப்பாக மட்டுமே உள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
கொரோனோ சிறப்பு தொகுப்பு திட்டம் மூலமாக இருபது லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்த மத்திய அரசு, இரண்டு லட்சம் கோடியை வேளாண் துறைக்கு ஒதுக்கியது. இந்த நிதியின் மூலமாக 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கிசான் கிரெடிட் கார்டுகள் மூலமாக விவசாயிகள் 3 லட்சம் வரை கடன்பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கான வட்டிவிகிதம் 4 சதவீதம் மட்டுமே என்றும் அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்பாகவே மட்டுமே உள்ளது என்றும், எந்த விவசாயியும் இதனால் பயன் பெறவில்லை என்றும் குமுறுகின்றனர் உழவர்கள்.
“தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதலே கிசான் கிரெடிட் கார்டுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவ்வப்போது அறிவிப்புகள் மட்டும் வெளியிட்டு கொண்டிருக்கிறார். ஆனால் விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று கிசான் கிரெடிட் கார்டுகள் பற்றி கேட்டால் அதுபற்றி தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பல ஊர்களில் உள்ள வேளாண் அலுவலர்கள், கால்நடை அலுவலர்கள் போன்றோருக்கும் இதுபற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகங்கள் இந்த கடன் அட்டை திட்டத்தால் பயனடைந்த விவசாயிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். கொரோனோவால் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை ஒரு ரூபாய்கூட உதவி செய்யவில்லை. ஆனால் பல லட்சம் கோடிகளுக்கு திட்டங்களை மட்டும் அறிவிக்கின்றனர். எனவே உடனடியாக விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார் விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜீவக்குமார்.