வாக்கு எண்ணும் மையத்தில் பெண் எஸ்.ஐயுடன் வாக்குவாதம்: திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்தில் பெண் எஸ்.ஐயுடன் வாக்குவாதம்: திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு
வாக்கு எண்ணும் மையத்தில் பெண் எஸ்.ஐயுடன் வாக்குவாதம்: திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கல்லூரி வளாகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசியல் கட்சியினர் கண்காணிப்பதற்காக தனி அறை அமைக்கப்பட்டு அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை ஆலங்காயம் முன்னாள் ஒன்றிய செயலாளர் அசோகன் மற்றும் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த தண்டபாணி ஆகியோர் கல்லூரி வளாகத்திற்குள் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ராணி, வருகைப் பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது உதவி ஆய்வாளருக்கும் திமுக பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் ராணி, வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் காவலர்கள் முன்பு என்னை அவதூறாக பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார்.

அதன்பேரில் பணி செய்ய விடாமல் தடுத்தல், அவதூறாக பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் திமுக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திமுக ஆலங்காயம் முன்னாள் ஒன்றிய செயலாளர் அசோகனிடம் கேட்டபோது உதவி ஆய்வாளர் ராணி தொடர்ந்து திமுகவினரை மட்டுமே தடுப்பதாகவும் அவதூறாக பேசுவதாகவும் அதிமுகவினருக்கு சாதகமாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com