மே.வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 'ரோமியோ எதிர்ப்பு படை' - யோகி ஆதித்யநாத் வாக்குறுதி

மே.வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 'ரோமியோ எதிர்ப்பு படை' - யோகி ஆதித்யநாத் வாக்குறுதி
மே.வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 'ரோமியோ எதிர்ப்பு படை' - யோகி ஆதித்யநாத் வாக்குறுதி

மேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில், அங்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்து வரும் பிரசாரம் திரிணாமூல் - பாஜக இடையே கூடுதல் உக்கிரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 'ரோமியோ எதிர்ப்பு படை' உருவாக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் வாக்குறுதி அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் ஹூக்லியில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பின்னால் சுற்றுபவர்களை அடக்க, 'ரோமியோ எதிர்ப்புப் படைகள்' உருவாக்கப்படும்" என வாக்குறுதி அளித்துள்ளார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், ''பாஜக ஆட்சிக்கு வந்தால் சகோதரிகள் மற்றும் மகள்களின் நலன்களைப் பாதுகாக்க, உத்தரப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ளது போல 'ரோமியோ எதிர்ப்புப் படைகள்' மேற்கு வங்கத்திலும் ஏற்படுத்தி, அனைத்து திரிணாமூல் காங்கிரஸ் ரோமியோக்களையும் சிறையில் அடைக்கும்.

இதேபோல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், திரிணாமூல் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்லத் தொடங்குவார்" என்றார்.

தொடர்ந்து குடியுரிமை சட்டம் தொடர்பாக பேசிய அவர், ''நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) போராட்டத்தின்போது வன்முறையைத் தூண்டும் மக்களுக்கு திரிணாமூல் கட்சியும், அதன் தொண்டர்களும் ஆதரவளித்தனர். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் அப்படியில்லை. அங்கு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததுடன், அவர்களால் ஏற்பட்ட சேதத்தை ஈடுகட்ட கலவரக்காரர்கள் சொத்துகளை பறிமுதல் செய்தோம்.

ஆனால் மம்தா இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கமாட்டார். ஏனென்றால் அது அவரின் திரிணாமூல் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும்" என்று பேசினார்.

இதேபோல் இந்தியா டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், ''நான் ஒரு பெருமைமிக்க இந்து. ஓர் இந்து என்பதால் ஒருவர் குறுகிய எண்ணம் கொண்டவர் என்று அர்த்தமல்ல. சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தை உலக அரங்கில் வலுவாக முன்வைத்தார். அவர்தான் 'நாங்கள் இந்துக்கள் என்பதை பெருமையாக சொல்லுங்கள்' என்றார். இந்துவாக இருப்பது எனக்கு ஒரு பெருமை, ஓர் அவமானம் அல்ல. அதை சொல்வதற்கு அப்பாவிகளை படுகொலை செய்தவர்கள், வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை சுரண்டியவர்கள் வெட்கப்பட வேண்டும்.

துர்கா பூஜையை அனுமதிக்காதவர்கள் இப்போது சாண்டி பாதையை ஓதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தங்களை இந்து என்று அழைக்க தயங்கியவர்கள் இப்போது தங்கள் இந்து அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்கள். இது எங்கள் கருத்தியல் வெற்றி மற்றும் அது நாங்கள் வெற்றிக்கு அருகில் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது" என்று மம்தாவை குறிவைத்தும் யோகி பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com