திருச்சியில் முகவரி இல்லாத 58 பேருக்கு 'முகவரி தந்ததால்' கிடைத்த ஓட்டுரிமை!

திருச்சியில் முகவரி இல்லாத 58 பேருக்கு 'முகவரி தந்ததால்' கிடைத்த ஓட்டுரிமை!
திருச்சியில் முகவரி இல்லாத 58 பேருக்கு 'முகவரி தந்ததால்' கிடைத்த ஓட்டுரிமை!

திருச்சியில் முகவரி இல்லாத  58 பேருக்கு,  முகவரி தந்ததால் ஓட்டுரிமை கிடைத்துள்ளது.

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த,  பல மொழிகளைப் பேசக்கூடிய மனிதர்கள், அனாதைகளாக சுற்றித் திரிகிறார்கள். ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்தும், கண்ணில்பட்டவர்கள் வாங்கிக்கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டும்  வாழ்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை, கைவிடப்பட்டவர்களது வாழ்க்கையை  மீட்டெடுக்க தனியார் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி குண்டூர் பகுதியில் அன்பாலயம் என்கின்ற ஆதரவற்றவர்களுக்கான தொண்டு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதன் நிறுவனர் அன்பாலயம் செந்தில்குமார், இவர் கடந்த 25  ஆண்டுகளுக்கும் மேலாக, திருச்சி மாநகரத்தில் தென்படும் கைவிடப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்கிவருகிறார். இதற்கு  முழு அங்கீகாரத்தையும், ஒத்துழைப்பையும், வழிகாட்டலையும்  கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

இங்கு அடைக்கலம் பெற்றவர்களது உறவுகளை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கும் பணியும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்தியாவில் வேறு எங்கும் ஆதரவற்றவர்களுக்கான இல்லங்களில் முகவரி இல்லாமல் தங்கி இருப்பவர்களுக்கு, இதுவரை வாக்குரிமை வழங்கப்படவில்லை.

கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான எச்சில் இரவுகள் என்ற திரைப்படத்தில்,  நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது. ஐயா,  தர்மம் போடுங்க சாமி என்று சொல்பவருக்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிக்கும்  இடையே ஒரு உரையாடல் இருக்கும்.

 A: சார்... சார்... 18 வயசானவங்களுக்குத்தான் ஓட்டுரிமையா?

 B: ஆமாம்.

 A: என் பெயர் பெத்தபெருமாளுங்க... வயசு 38  ஆகுதுங்க...

 B: வீட்டு விலாசம்?...

 A: வீடுனு ஒன்னு  இருந்தால் தானே, விலாசமுன்னு ஒன்னு இருக்கும்.

 B: வீட்டு விலாசம் உள்ளவங்களுக்குத் தான் ஓட்டு.

 A: அப்போ வயசானவங்களுக்கு ஓட்டு இல்ல. வீடு உள்ளவங்களுக்குத்தான் ஓட்டு. அத விளக்கமா சொல்லாம,  ஏன் சார் பொய் சொன்னீங்க?

 B: அப்படி நான் ஒன்னும்  சொல்லலப்பா. ஆள விடு ...என்று தேர்தல் அதிகாரி ஓடிவிடுவார்.

ஆனால் இன்று நிலைமை வேறாக மாறிவிட்டது. அன்பாலய ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள 58 பேருக்கு, இந்திய வரலாற்றில் முதல்முறையாக வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதன் மூலமாக கைவிடப்பட்டவர்களுக்கு ஓட்டுரிமை கிடைத்துவிட்டது. நாட்டில் கைவிடப்பட்டவர்கள் என்று யாரும் இல்லை என்ற நிலையை இனிவரும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தித்தர வேண்டும்.

-திருச்சி லெனின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com