திரையும் தேர்தலும் 10: கதாபாத்திரம் உதயசூரியன்... கதாநாயகன் எம்.ஜி.ஆர்!

திரையும் தேர்தலும் 10: கதாபாத்திரம் உதயசூரியன்... கதாநாயகன் எம்.ஜி.ஆர்!
திரையும் தேர்தலும் 10: கதாபாத்திரம் உதயசூரியன்... கதாநாயகன் எம்.ஜி.ஆர்!

தமிழ் சினிமாவின் வரலாறு எழுதப்படும்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனி அத்தியாயம் எப்போதும் ஒதுக்கப்பட்டே ஆகவேண்டும். சினிமாவின் பயனை மிகச் சரியாக புரிந்துகொண்டு, பயன்படுத்திய அரசியல் இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம். குறிப்பாக, 1957-ல் இருந்து 1963 வரையிலான காலக்கட்டத்தை பற்றி நாம் அறிந்துகொள்ளுதல் மிக அவசியம். ஆரம்ப காலத்தில் காங்கிரஸின் கொள்கைகளை மட்டுமே எதிர்க்கும் கட்சியாக இருந்த திமுகவுக்கு, அதன்பின்னர் புதிய தேவை ஏற்பட்டது. காரணம், 1956-ல் நடந்த ஒரு மாநாட்டில், 'பொதுத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுவது' என்றொரு தீர்மானத்தை திமுகவினர் நிறைவேற்றினர். தமிழக அரசியல் சரித்திரத்தின் மிக முக்கிய நிகழ்வு இது.

1957, பிப்ரவரி 10-ஆம் தேதி நடந்த மற்றொரு மாநாட்டில் பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பில் 115 வேட்பளார்கள் போட்டியிடுவதென ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதே 1957-ல் 'சக்கரவர்த்தி திருமகள்' என்றொரு படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் இளவரசியை அடைய பல்வேறு நாட்டு மன்னர்கள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அந்தப் போட்டிகள் எல்லாவற்றிலும் காவேரி பட்டணத்து இளவரசன் வெற்றிவாகை சூடுகிறான். அவன் பெயர் 'உதயசூரியன்'. ஆம், திமுக தனது தேர்தல் சின்னமாக தேர்ந்தெடுத்து கொடுத்த அதே உதயசூரியன். படத்தில் உதயசூரியனாக நடித்தவர் எம்ஜிஆர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் படத்தை இயக்கியது தீவிர காங்கிரஸ்காரனான ப.நீலகண்டன். அதேபோல் 'மலைக்கள்ளன்' படத்தில் தத்துவப்பாடலோடு துவங்கிய எம்ஜிஆர், இந்தப் படத்தில், "மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போகப்போக மாறுது" என்றொரு தத்துவப் பாடலோடு அறிமுகமானார்.

பொதுத் தேர்தலில் திமுகவினர் 15 பேர் அபார வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றனர். அதேநேரத்தில், கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான 'மணிமகுடம்' நாடகம் எம்ஜிஆர் நடிப்பில் 'புதுமைப்பித்தன்' என்ற பெயரில் வெளியானது. 'மணிமகுடம்' நாடகத்தில் நாயகனாக நடித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். அதே வருடத்தில் கருணாநிதி கதை - வசனத்தில் 'புதையல்' என்றொரு படமும் வெளியானது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஆரம்ப காலத்தில் பிராமனியத்துக்கு எதிராக உரத்து பேசிய திமுகவினரின் படங்கள், தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தபின் சற்றே குறைந்து, சமூகக் கொடுமைகளை சாடுவதில் மட்டும் அக்கறை காட்ட தொடங்கியன.

எப்படி காங்கிரஸார் கதர் உடைகள் அணிவதை தங்களது கொள்கையாக கொண்டார்களோ, அதேபோல் திமுகவினர் கைத்தறித் துணிகளை தேர்ந்தெடுத்தனர். கைத்தறி ஆடைகளை பிரபலப்படுத்தும் விதமாக 'புதையல்' படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், "சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி" என்றொரு பாடலை எழுதியிருந்தார். இந்தப் படத்தின் போஸ்டரில் "கதை வசனம் - கலைஞர் மு.கருணாநிதி எம்.எல்.ஏ" என்று முதன்முறையாக வெளிவந்தது. இதுபோக 'வணங்காமுடி', 'மகாதேவி', 'ராஜராஜன்' போன்ற சரித்திரப் படங்களும் திமுக சார்பில் அந்த ஆண்டு வெளிவந்தன. எலலாமே புரட்சி பேசும் படங்களாகவும் இருந்தன.

1958-ல் எம்ஜிஆர் பிக்சர்ஸ் என்றொரு புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உருவானது. எம்ஜிஆர் சொந்தமாக படக் கம்பெனி துவங்கி, 'நாடோடி மன்னன்' படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்தப் படக் கம்பெனியின் சின்னம் என்ன தெரியுமா? ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் கைகளிலே திமுக கொடியை பற்றியிருப்பதைப் போன்ற வடிவம். திராவிட இனங்களின் கூட்டு முழக்கமாக ஒரு காட்சியில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கூட பாடல் வரிகள் இடம்பெற்றன இப்படத்தில்.

"வீரம் உறங்காத தென்னாடுதனை ஆளும் வேந்தே நீ வருகவே... பார் புகழும் உதயசூரியனே... பசியின்றி புவிக் காக்கும் பார்த்திபனே" என்று படத்தில் எம்ஜிஆர் வருகையை குறிக்கும் ஒரு பாடலை கவிஞர் சுரதா எழுதியிருந்தார். "எங்கள் திராவிடப் பூங்காவில் மலர்ந்த வேந்தே!" என்றும் எம்ஜிஆரை புகழ்ந்திருந்தார்.

மேலும், படத்தில் இடம்பெற்ற முக்கியமான பாடலொன்றில் வரும் கீழ்க்கண்ட வரிகளை கவனியுங்கள்...

"நானே போடப்போறேன் சட்டம் - பொதுவில்
நன்மை பயக்கும் திட்டம்
நாடு நலம்பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்"

- இந்தப் பாடல் வரிகளில் 'நானே' என்பது திமுகவைக் குறிப்பதாக ஒப்பிட்டு மக்கள் மகிழ்ந்தனர். இதுபோக இந்தப் படத்தில் "தூங்காதே தம்பி தூங்காதே" பாடலும், "உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா..." என்ற பாடலும் இடம்பெற்றது. எல்லாமே சமூகக் கருத்துகள் வழி அரசியல் பேசும் பாடல்களாக அமைந்திருந்ததை நாம் கவனிக்கலாம்.

'Pride and Passion' என்றொரு ஆங்கிலப் படம் சென்னையில் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தை பார்த்த அண்ணா, "இந்த மாதிரி நான்கே நான்கு படங்கள் தணிக்கை செய்யாமல் வெளியிட அனுமதித்தால், திராவிட நாட்டை நாங்கள் அடைந்து விடுவோம்" என்று குறிப்பிட்டார். அதே அண்ணா, 'நாடோடி மன்னன்' படம் பார்த்துவிட்டு, "இன்னும் பல காலத்துக்கு மக்கள் பேசக்கூடிய ஒரு நல்ல படம். எம்ஜிஆர் பெற்ற புகழ் தாம் பெற்ற புகழாகும்" என்றும் கூறினார். எப்படி சுதந்திரத்திற்கு முன்பு வெளியான காங்கிரஸ் ஆதரவு நபர்கள் எடுத்த சரித்திரப் படங்களில் மக்கள் காந்தி குல்லா அணிந்து தோன்றினரோ. அப்படியே மருதுபாண்டியர் வரலாறு சொல்லும் 'சிவகங்கை சீமை' கதையில் "வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது" என்றொரு வரியை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். 'திராவிட நாடு' என்கிற முழக்கம் 1940-ல் தான் முதன்முதலில் எழுப்பப்பட்டது. அதுமட்டுமின்றி திராவிட கழக ஆதரவு பத்திரிகைகளான 'மன்றம்', 'முரசொலி', 'நம்நாடு', 'தென்றல்' ஆகிய பெயர்களை குறிப்பிடும்படி,

"மன்றம் மலரும், முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம்நாடு
இளந்தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
திராவிட திருநாடு" - என்றொரு பாடலும் அந்தப் படத்தில் இடம்பெற்றது.

இதைத்தொடர்ந்து அதே கண்ணதாசன் கதை - வசனத்தில் வெளிவந்த 'மன்னாதி மன்னன்' படத்தில், "அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா.." என்றொரு பாடலும் எம்ஜிஆர் பாடுவதாக எழுதப்பட்டது. இப்படியாக வெளிவந்த படங்கள் அனைத்துமே ஏதேனும் ஒருவகையில் திராவிட கட்சிகளின் புகழ் பாடுவதை நோக்கமாக கொண்டிருந்தன. அந்தப் படங்கள் மிகப் பெரிய வரவேற்பையும் மக்களிடையே பெற்றன.

1963-ல் பிரிவினைத்தடை மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பிரிவினைக் கோரிக்கை வைத்துள்ள அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்க தடை விதித்தது அந்த மசோதா. இதன் காரணமாக தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு திமுக உள்ளானது. அவர்களது கட்சிக் கொள்கை வரைவில் தனித் தமிழ்நாடு என்கிற கோரிக்கை திருத்தப்பட்டது.

இந்நிலையில், கம்யூனிஸ்ட்களும் பெரும் திரளாக தமிழ் சினிமாவில் நுழைந்தனர். ஏற்கெனவே பல திராவிட கழகத்தவர்களோடு நல்ல நட்பில் இருந்த தோழர் ஜீவானந்தம் போன்றவர்கள் கம்யூனிஸ்ட்கள் திரைத்துறைக்குள் நுழைய வேண்டி இருந்ததன் அவசியத்தை உணர்ந்திருந்தார்கள். அதன் விளைவாக சில பல நல்ல சினிமா கூட்டணிகளும் உருவானது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகள் நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியில் பங்குபெற்றவர்கள். 'பாதை தெரியுது பார்' போன்ற படங்கள் மூலமாக தாங்கள் சொல்லவந்ததை பாடல் வழியாகவும், காட்சி வழியாகவும் அழுத்தம் திருத்தமாக கூறினர். கம்யூனிஸ்ட்களை திரைத்துறையில் வளரவிடுவது சரியல்ல என்று நேரடியாகவே நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் குறிப்பிட்டதை நாம் நினைவுகூர வேண்டும்.

கம்யூனிஸ்ட்களின் பெரும் படைப்பாக உருவானது 'பாதை தெரியுது பார்'. இந்தப் படம் தமிழ் மக்களின் ரசனையில் பெரும் மாறுதலை கொண்டுவரப்போகிறது என்பதை விநியோகஸ்தர்கள் உணர்ந்தனர். உண்மையில் ஒரு படம் விளம்பரம் பெற்று வெற்றிபெற வேண்டுமெனில், சென்னையில் உரிய முறைகளோடு திரையிடப்பட வேண்டும். நல்ல திரையரங்கில் வெளியானால், அது தானாகவே மக்களை ஈர்க்கும். ஆனால், இந்தப் படத்தை வாங்கிய ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் ஊருக்கு ஒதுக்குபுறமாக மோசமாகப் பராமரிக்கப்படும் திரையரங்கு ஒன்றில் வேண்டுமென்றே வெளியிட்டார். அதேபோல் பிற மாவட்டங்களிலும் இப்படியான வேடிக்கையே நிகழ்ந்தது. தொழிலாளர்கள் பற்றி எடுத்த இந்தப் படம் பஞ்சாலை தொழிலாளர்கள் நிறைந்த கோவை மாவட்டத்தில் எங்குமே திரையிடப்படவில்லை என்றால், இந்தப் படம் ஓடாமல் இருக்க பின்னணி வேலை எவ்வளவு நடந்திருக்கும் என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள்.

தொழிலாளி வர்க்கம் தனது கலைப் படைப்பை உருவாக்கினால் மட்டும் போதாது. அதை மக்களிடம் கொன்று செல்கிற வியாபார யுக்தியும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற பெரும் பாடம் இந்தப் படத்தின் தோல்வி மூலம் கம்யூனிஸ்ட்களுக்கு கிட்டியது. தொழிலாளர் நலனுக்கான ஒரு படத்தை, அதற்கு எதிரான மனநிலை கொண்ட வியாபாரிகளிடம் விநியோகிக்க கொடுத்ததன் பலனை உணர்ந்தனர்.

திரைத்துறையினர் அரசியலில் ஈடுபட்டதில் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும், திரைத்துறைக்குள் அரசியல் நுழைந்ததில் ஏற்பட்ட மிகப் பெரும் வேதனை இது. எப்படி பலரின் வாழ்வுக்கு அரசியலும், திரைத்துறையும் காரணமோ, அப்படியே பல நல்ல விஷயங்களின் அழிவுக்கும் அதே அரசியலும், திரைத்துறையும் காரணமாக அமைந்ததை 'பாதை தெரியுது பார்' உணர்த்திச் சென்றது.

திரை நீளும்...

- பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com