திரையும் தேர்தலும் 9: காங். ஆட்சியில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' சினிமா சந்தித்த சிரமங்கள்!

திரையும் தேர்தலும் 9: காங். ஆட்சியில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' சினிமா சந்தித்த சிரமங்கள்!
திரையும் தேர்தலும் 9: காங். ஆட்சியில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' சினிமா சந்தித்த சிரமங்கள்!

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு தலைவர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட பல நாடுகள் தங்கள் வெற்றிக்கதையையும், அதற்காக பாடுபட்ட தங்கள் நாட்டு ராணுவவீரர்களின் கதைகளையும் நாவல்களாகவும், நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் எடுத்து, அதற்குரிய மரியாதையை செய்துகொண்டே இருந்தனர். இன்றும் அதைப் பற்றிய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், தமிழகத்திலோ நிலைமையே வேறு. 1947-ல் சுதந்திரம் அடைந்திருந்தாலும்கூட 1959-ல்தான் முதன்முதலாக வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வாயிலாக சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றிய ஒரு திரைப்படம் வெளியானது. உண்மையில் காங்கிரஸார் மட்டும் தமிழகத்தில் திரைத்துறையோடு நெருக்கமாக இருந்திருந்தால், அப்படியான பல படங்கள் கண்டிப்பாக வெளிவந்திருக்கும்.

சத்தியமூர்த்தி மறைவுக்கு பின்னர் திரைத்துறைக்கும், காங்கிரஸ் கட்சிக்குமான உறவே மொத்தமாக துண்டிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ராஜாஜியை தலைவராக கொண்ட காங்கிரஸ், திமுகவினர் நிறைந்திருந்த சினிமாவை வெறுத்தனர். 'கூத்தாடிகள்' என்று ஏளனம் செய்தனர். என்னதான் சத்தியமூர்த்தியின் அரசியல் வாரிசாக காமராஜர் அறியப்பட்டாலும் கூட, அவர் தன் குருவைப்போல கலையுலகத்தின் மீது பற்று கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக பல காங்கிரஸ் ஆதரவு கலைஞர்கள் வெவ்வேறு கட்சிகளை நோக்கிப் போவதும், பலர் சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டு மொத்தமாக கலையுலகை விட்டே போவதும் நிகழ்ந்தது.

'வீரபாண்டிய கட்டபொம்மன்' அரசியலில் உண்டாக்கிய அலை மிகப்பெரியது. இந்தப் படத்தின் கதை விவாதக் குழுவின் தலைவராக இருந்தவர் தமிழரசுக் கட்சியின் தலைவர் ம.பொ.சிவஞானம். படத்தில் வசனங்கள் அனல் பறந்தன.

"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி!" போன்ற காலத்தால் அழியா வசனங்களை சக்தி கிருஷ்ணசாமி எழுதியிருந்தார். உண்மையில் வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பட்ட சிரமங்களை விட, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த சினிமா கட்டபொம்மன் அதிக சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தது.

1857 சிப்பாய்க் கழகத்தை இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டமாக கணக்கிட்டு, 1957-ல் அதற்கான நூற்றாண்டு விழாவை காங்கிரஸ் கொண்டாடியது. அதற்கு முன்னதாகவே கட்டபொம்மன் முதல் முழக்கம் செய்தான் என்று ம.பொ.சிவஞானம் கூறினார். அதன் காரணமாகவும், என்னதான் திமுகவில் இருந்து வெளிவந்திருந்திருந்தாலும் கூட முழுமையாக காங்கிரஸ் பக்கம் சிவாஜி கணேசன் சாயாத காரணத்தாலும் காங்கிரஸ்காரர்கள் கட்டபொம்மனை பெரிதாக மதிக்கவில்லை. இதுமட்டுமின்றி, "கட்டபொம்மன் தெலுங்கர். கொள்ளைக்காரரும் கூட. அவருக்கு முன்பே புலித்தேவன் என்கிற வீரமறவர் போராடினார்" என்று இன்னொருபக்கம் போராட்டத்தை ஆரம்பித்தார் 'கல்கண்டு' பத்திரிகை நடத்தி வந்த தமிழ்வாணன்.

தி.மு.கழகமோ, "கட்டபொம்மனை விட மருதுபாண்டியர்கள்தான் மாவீரர்கள்" என்றொரு வாதத்தை முன்வைத்தனர். கவியரசர் கண்ணதாசன் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' வெளியான அதே மாதத்தில் மருதுபாண்டியர்கள் கதையை கூறும் 'சிவகங்கை சீமை' என்றொரு படத்தை வெளியிட்டார். இத்தனைக்கும் மத்தியில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' 26 வாரங்கள் ஓடி வெற்றிகண்டது. வெற்றிப்படமே ஆனபோதிலும் படம் மிக பிரமாண்டமான முறையில் நிறைய செலவு செய்து எடுத்திருந்தபடியால் செலவுக்கு தகுந்த வருமானம் தயாரிப்பாளர் பந்துலுவுக்கு கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து பந்துலு, சிவாஜியை வைத்து 'கப்பலோட்டிய தமிழன்' எடுக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தின் கதை ஆலோசனைக் குழுவிலும் ம.பொ. சிவஞானம் இடம்பெற்றார். காங்கிரஸ் ஆதரவாளரான பந்துலு மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதினார். காரணம் வ.உ.சிதம்பரனார் வரலாறு சமகாலத்தில் நிகழ்ந்தது. அதீத உணர்ச்சிப்பெருக்குடன் எடுக்கப்பட்ட இந்தப் படம் காண்பவரை கண்ணீரில் ஆழ்த்தினாலும் கூட, படத்தில் இடம்பெற்ற பாரதியார் பாடல்கள் அனைத்தும் அற்புதமாக பொருந்திப் போயிருந்தாலும் கூட, வசூல் ரீதியாக மிகப் பெரிய தோல்வியையே சந்தித்தது. இதனால் பந்துலு பொருளாதாரரீதியாக நொடித்து போனார். இனி இப்படியான படங்கள் எடுக்கவே வேண்டாம் என்று முடிவு செய்தார்.

என்னதான் பந்துலு காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளித்து, கேளிக்கை வரியில்லாமல் வெளியிட்டு, குறைந்த கட்டணத்தில் அனைவரையும் பார்க்க வைத்து படத்தை வெற்றிப் படமாக்கி இருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக, 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டது. இதிலேயே காங்கிரஸுக்கும், சினிமா என்கிற கலைக்குமான தூரத்தை நீங்கள் உணரலாம்.

1959-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், திமுக சென்னை மாநகராட்சியை வெற்றிகரமாக கைப்பற்றியது. இந்த வெற்றிக்குக் காரணம் எம்ஜிஆர் மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோரின் சினிமா கவர்ச்சிதான் என்று காங்கிரஸார் தீவிரமாக நம்பினர்.

இதுமட்டுமின்றி அப்போது கவிஞர் கண்ணதாசன் என்னதான் திமுகவில் இருந்தாலும் கூட, காங்கிரஸ் தலைவரான காமராஜருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். அவர் மீது பெரும் மரியாதையும் வைத்திருந்தார். 1960-ல் வெளிவந்த 'படிக்காத மேதை' படத்தில் கூட,"படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு, பாடம் படிக்காத மேதைகளும் பாரினிலுண்டு" என்று காமராஜரை குறிப்பிட்டு ஒரு பாடல் எழுதியிருப்பார். 1962-ல் ஈ.வி.கே.சம்பத் மற்றும் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி, 'தமிழ் தேசியக் கட்சி'யை உருவாக்கினார்கள். அதன்பின்னர் சிவாஜி கணேசன் நேரடியாக காங்கிரஸ் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதை பகிரங்கமாக அறிவித்தார். ஆனாலும் கூட 1964-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலிலும் திமுகவே வெற்றிவாகை சூடியது.

இதுமட்டுமின்றி, அந்தத் தேர்தலுக்கு முன்பு பிரசாரத்தின் போது, "வேட்டைக்காரன் வருகிறான் ஜாக்கிரதை..." என காமராஜர் மேடையில் சொன்னார். 'வேட்டைக்காரன்' படத்தில் நடித்த எம்ஜிஆரை மனதில் வைத்தே காமராஜர் அதை கூறியிருந்தார். ஆக, நடிகர்கள் கட்சிக்கு முக்கியம் என்பதை மறுபடி காங்கிரஸ்காரர்கள் தீவிரமாக நம்பினர். அதனால், 1966-ல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது அளித்து பெருமைப்படுத்தியது. 1967-ல் நடந்த பொதுத்தேர்தலில் சம்பத், கண்ணதாசன் போன்றோர் காங்கிரஸுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தனர். காங்கிரஸும் நடிகர்களை பிரசாரத்தில் நேரடியாக ஈடுபடுத்துதல் சிறந்த வழியென்று கருதி சிவாஜி, பத்மினி போன்றோரை தேர்தல் மேடைகளில் ஏற்றியது. சிவாஜி கணேசன் தமிழ்நாடு முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.

ஆனால், காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சின்ன அண்ணாமலை என்பவர், 'அனைத்திந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்' என்றொரு அமைப்பை காங்கிரஸ்காரர்களைக் கொண்டே அமைத்தார். தமிழ்நாடு முழுவதும் அதற்கு கிளைகள் தொடங்கி, சிறப்பு மாநாடுகள் பல நடத்தி வந்தார். காங்கிரஸ் கட்சியின் வேலைகளை சிவாஜி மன்றத்தில் இருந்த சிவாஜி ரசிகர்கள் மேற்கொண்டனர். ஆனாலும் காங்கிரஸுக்கும், கலைஞர்களுக்குமான உறவு தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படும் ஓர் உறவாக மட்டுமே இருந்தது. 'கலைஞர் காங்கிரஸ்' என்று இன்னொரு அமைப்பும் கூட காங்கிரஸில் உருவானது. காங்கிரஸ் கூட்டங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அந்தக் குழு பயன்பட்டது. வேறு யாதொரு முன்னெடுப்பும் அதன்மூலம் நிகழவில்லை.

விடுதலைக்குப் பிறகு, தங்கள் கட்சியின் உயரிய கொள்கைகளாக இருந்த ஜனநாயகம், மதச்சார்பின்மை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை முன்னெடுக்கும் எந்தவொரு கலைப் படைப்பையும் காங்கிரஸ் உருவாக்கவில்லை. அதை உருவாக்கித் தரும் திறமையுள்ள கலைஞர்களையும் அது வளர்த்தெடுக்கவில்லை. இருபது ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும்கூட இவையாவும் நடக்கவில்லை என்பது உண்மையிலேயே வருத்தத்திற்குரியது. சிவாஜி, கண்ணதாசன் போன்றோர் தாங்கள் பங்கு கொண்ட படங்களில் அவர்களது சொந்த உற்சாகத்திலும், காமராஜர் மேலிருந்த அதீத அபிமானத்திலும், தொடர்ந்து அவரைப் புகழ்வது போன்று பாடல் காட்சிகளும், வரிகளும் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டனரே தவிர, காங்கிரஸுக்கும், தமிழ்த் திரையுலகிற்கும் எந்தவொரு பெரிய உறவுமே இல்லாமல் போய்விட்டது. தமிழ்த் திரையுலகில் காங்கிரஸின் பங்கும் இவ்வளவுதான்.

மாறாக, இன்னொரு பக்கம் தி.மு.கழகம் தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்ததிலிருந்து, இதோ இன்றைய நாள் வரை திரையுலகை தங்களின் அரசியலின், பிரசாரத்தின் ஒரு பாகமாகவே கருதுகின்றார்கள். அந்த நீண்ட நெடிய வரலாறு நிறைய சுவாரஸ்யங்களை கொண்டது.

திரை நீளும்...

- பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com