தமிழகத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல்: குழப்பங்களுடன் முதல்வரான ராஜாஜி!

தமிழகத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல்: குழப்பங்களுடன் முதல்வரான ராஜாஜி!
தமிழகத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல்: குழப்பங்களுடன் முதல்வரான ராஜாஜி!

1952-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகத்தின் முதல் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், பல கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் ராஜாஜி ஆட்சியமைத்தார். அந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களை வென்று இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது.

1947-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ஓமந்தூரார் ரெட்டியார் 1947 மார்ச் 23 முதல் 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதிவரை பதவி வகித்தார். அதன்பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 வரை காங்கிரஸ் கட்சியின் குமாரசாமி ராஜா முதல்வராக இருந்தார். 1950 ஆம் ஆண்டு இந்தியா குடியரசாகி அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டபின்பு சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற தேர்தல் 1952 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதிவரை 8 கட்டங்களாக நடந்தது.

375 உறுப்பினர்கள் கொண்ட சென்னை மாகாண சட்டப்பேரவை:

1952-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் மொத்தம் 375 உறுப்பினர்கள் இருந்தனர், இவர்கள் 309 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது இரட்டை உறுப்பினர் முறை இருந்ததால், 66 தொகுதிகளில் இரட்டை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 62 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கும், 4 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டன. மொத்தமுள்ள 375 உறுப்பினர்களில், 3 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 372 உறுப்பினர்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த உறுப்பினர்களில் 190 பேர் தமிழகத்திலிருந்தும், 143 பேர் ஆந்திராவிலிருந்தும், 11 பேர் கர்நாடகாவிலிருந்தும், 29 பேர் கேரளாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1952 தேர்தல் திருவிழா:

1952-ஆம் நடந்த முதல் சட்டமன்ற தேர்தல் திருவிழாவில் பலமுனை போட்டி நடந்தது. முதல் தேர்தலிலேயே காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் முதல்வர் த.பிரகாசம், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்ற ஒரு கட்சியை நிறுவியிருந்தார். ஆந்திர பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருந்தது. எனவே, இத்தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் முக்கிய கட்சிகளாக களம் கண்டன. இதுதவிரவும் பல முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தன.

தேர்தல் முடிவுகளின்படி எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை, இந்திய தேசிய காங்கிரஸ்க்கு 152 இடங்களில் மட்டுமே வென்றது, இந்திய கம்யூனிஸ்ட் 62 உறுப்பினர்களை வென்றது. அதற்கு அடுத்த இடங்களில் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 35, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19, கிரிஷிகார் லோக் கட்சி 15, பொதுவுடமை கட்சி 13, காமன்வீல் கட்சி 6, சென்னை மாநில முஸ்லீம் லீக் 5, பார்வர்டு பிளார்( மார்க்ஸிஸ்ட் குழு) 3, தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு 2, நீதிக்கட்சி 1, சுயேச்சைகள் 62 இடங்களில் வென்றிருந்தனர்.

குழப்பங்களுடன் முதல்வரான ராஜாஜி:

1952 தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் பிரகாசம் தலைமையிலான கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் இணைத்து 'ஐக்கிய ஜனநாயக முன்னணி' என்ற பெயரின் 166 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் ஓய்வில் இருந்த ராஜாஜி தலைமையில் ஆட்சியமைக்க விரும்பினார்கள். இதனால் காமன்வீல் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சுயேச்சைகள் என பல கட்சிகளின் ஆதரவுடன் ராஜாஜி ஆட்சியமைத்தார்.

அதன்பின்னர் பல சுயேட்சை உறுப்பினா்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் ஆனார்கள். 1952 ஏப்ரல் 1 ஆம் தேதி 152 ஆக இருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா்கள் எண்ணிக்கை செப்டம்பா் மாதம் 30 ஆம் தேதி 167 ஆக ஆனது. ராஜாஜி அப்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாததால் அவர் முதல்வராவதில் சிக்கல் ஏற்பட்டது, அதன்பின்னர் அவர் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தின் முதல் சட்டமன்றத்தின் முதலமைச்சர் 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி பதவியேற்றார். அதன்பின்னர் 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு 140 தொகுதிகள் அம்மாநிலத்திலும், 5 தொகுதிகள் மைசூரிலும் இணைக்கப்பட்டது. இதன்பிறகு ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் உள்ளிட்ட சிக்கல்களால் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13இல் காமராசர் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

- வீரமணி சுந்தர சோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com