மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அடுத்தடுத்து ட்விஸ்ட்... அமளிதுமளியான சோஷியல் மீடியா!

மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அடுத்தடுத்து ட்விஸ்ட்... அமளிதுமளியான சோஷியல் மீடியா!
மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அடுத்தடுத்து ட்விஸ்ட்... அமளிதுமளியான சோஷியல் மீடியா!

தீவிரமாக தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். தங்களது பரப்புரைகளுக்கு ஒரு பெயரிட்டு அதனை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றன. வெற்றி நடை போடும் தமிழகம் என அதிமுக, அதிமுகவை நிராகரிப்போம், மக்கள் கிராம சபைக் கூட்டம் என திமுக என அனல் பறக்கிறது தேர்தல் களம். இந்த பரப்புரை களத்திலேயே அடுத்தடுத்து ட்விஸ்ட்கள் அரங்கேற போர்க்களமாகிறது சோஷியல் மீடியா. அந்தந்த கட்சிகளின் ஐடி விங்குகளும் தீவிரமாக இயங்கவும் செய்கின்றன. அப்படி ட்விஸ்ட்கள் அரங்கேறிய சம்பவம் தான் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம். கிராம சபைக் கூட்டம் என திமுக பரப்புரையை கையிலெடுத்தது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே முட்டுக்கட்டை போட்டது தமிழக அரசு.

கிராம சபைக் கூட்டம் என்பது அரசால் நடத்தப்பட வேண்டியது என வாதிட்டது. அதற்கு ஏற்ப தன்னுடைய பரப்புரை பெயரை மக்கள் கிராம சபைக் கூட்டம் என மாற்றி பயணித்தது திமுக. அப்படி நடைபெற்ற கோவை தொண்டாமுத்தூர் கூட்டம் இணையத்தில் வைரல். அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் நிறைந்த ஒரு சம்பவமாக அந்த கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் மொத்தம் 5 ஆண்கள்,5 பெண்கள் என மொத்தம் 10 பேருக்கு கேள்வி கேட்க அனுமதியளிக்கப்பட்டது. ஒவ்வொருவராக கேள்வி கேட்டுக்கொண்டிருந்த நிலையில், திடீரென எழுந்த பெண் ஒருவர் ஸ்டாலினை நோக்கி ''இங்கு ஏன் கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ''இடையே கேள்வி கேட்க வேண்டாம்'' என கூறி அந்தப் பெண்ணை அமருமாறு கூறினார். ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், உங்களை அமைச்சர் அனுப்பி வைத்திருக்கிறாரா, நீங்கள் இந்தத்தொகுதிக்கு உட்பட்டவரா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார். இந்த சம்பவத்தை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. கேள்வி கேட்டால் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரா என கேள்வி எழுப்பினர். அந்த பெண் வெளியேற்றப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.

இப்படியாக சோஷியல் மீடியாவில் திமுகவுக்கு எதிரான கருத்துகள் பதியப்பட்டன. அடுத்த சில மணி நேரங்களில் அதிமுகவுக்கு எதிராக கிளம்பியது சோஷியல் மீடியா. காரணம், திமுக கூட்டத்தில் பேசிய பெண் அதிமுக நிர்வாகி என்பதும், அது தொடர்பான புகைப்படங்களும் பதியப்பட்டன. மேலும் வெளியேற்றப்பட்டவுடன் அந்த பெண் அதிமுக அமைச்சர் வேலுமணியிடம் போனில் பேசிய பேச்சும் வைரலானது. அதன்பின்னர் சோஷியல் மீடியாவில் திமுகவின் ஐடி விங்குகளின் கைகள் ஓங்கின. இப்படியாக ஒரே நாளில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள், பரபரப்புகள் என சோஷியல் மீடியா பரபரப்பானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com