"அப்போ 1,000, 2,000... இப்போ 50,000, 1 லட்சம்..!" - திருப்பூரும் கட்சிக் கொடிகளும்

"அப்போ 1,000, 2,000... இப்போ 50,000, 1 லட்சம்..!" - திருப்பூரும் கட்சிக் கொடிகளும்
"அப்போ 1,000, 2,000... இப்போ 50,000, 1 லட்சம்..!" - திருப்பூரும் கட்சிக் கொடிகளும்

அப்போதெல்லாம் ஒரு கட்சிக்கு ஆயிரம், ரெண்டாயிரம் என இருந்த கட்சி கொடிகளுக்கான ஆர்டர் அம்பதாயிரம், ஒரு லட்சம் என இப்போது கூடியுள்ளது. 

இந்தியாவில் ஆடை உற்பத்தியில் மிகவும் பிரபலமான நகரங்களில் நம் தமிழகத்தில் உள்ள திருப்பூரும் ஒன்று. பின்னலாடை, ஆயத்த ஆடை சார்ந்த தொழிலுக்கு மிகவும் பிரபலம் இந்த ஊர். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்ற பருத்தி ஆடைகளில் திருப்பூரின் பங்களிப்பு 90 சதவிகிதம். சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர். தேர்தல் நேரங்களில் கட்சி கொடி, டி ஷர்ட், தொப்பி, தோரணம், மஃப்ளர் துண்டு என தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு ஆடைகளை வடிவமைத்து, விற்பனை செய்வதும் திருப்பூரில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களின் வழக்கம்.

திருப்பூர் வட்டாரத்தில் விசாரித்ததில் கட்சி கொடிகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடுவது நான்கு உற்பத்தியாளர்கள்தான் என அறிந்து கொண்டோம். இந்த முன்னணி உற்பத்தியாளர்களிடமிருந்து தான் சில்லறை வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. 

கட்சி கொடி தயாரிப்பில் முன்னணி உற்பத்தியாளராக உள்ள 'திருப்பூர் ஃபிளாக்ஸ்' (TIRUPUR FLAGS) உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் மகேஷ் குமாரிடம் பேசினோம்…

"முப்பது வருஷத்துக்கு மேல அரசியல் கட்சிகளுக்கு வேண்டிய கட்சி கொடிகள உற்பத்தி செய்து கொடுக்குற இந்தத் தொழில நாங்க செய்துகிட்டு வர்றோம். தொடக்கத்துல எங்க அப்பா இதை கவனிச்சு வந்தாங்க. இப்போ நான் பாத்துக்குறேன். தொடக்கத்துல பருத்தியினாலான பேனர் மற்றும் கொடிகளை தான் தயாரித்து கொடுத்தோம். பிளக்ஸ் பேனர் வருகையால் துணியினாலான பேனர்களுக்கு வரவேற்பு இல்லாமல் போக அதன் பயன்பாடு குறைந்தது. அதனால் அதிகளவில் கட்சி கொடிகளை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். 

அப்போதெல்லாம் ஒரு கட்சிக்கு ஆயிரம், ரெண்டாயிரம் என இருந்த கட்சி கொடிகளுக்கான ஆர்டர் அம்பதாயிரம், ஒரு லட்சம் என இப்போது கூடியுள்ளது. தேர்தல் நேரங்களில் கொடிகளுக்கான டிமாண்ட் இந்த எண்ணிக்கையை  விடவும் கூடுவது உண்டு. கட்சிகளும் தேவைகளுக்கு ஏற்ப செலவு செய்ய தயாராக உள்ளன. எங்களுக்கு ஆர்டர் கொடுக்கின்ற சம்மந்தப்பட்ட கட்சியின் கொடிகளை பிரின்ட் செய்து அதை திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருக்கின்ற டெய்லர்களிடம் கொடுப்போம். அவர்கள் அதை கத்தரித்து, தனித்தனி கொடிகளாக தைக்க வேண்டும். அதை வார இறுதி நாட்களில் சென்று சேகரித்து வருவோம். அவர்கள் தைத்துள்ள கொடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூலி கொடுப்போம்.

அது தவிர பேப்பரினாலான தோரணக் கொடிகள் தயாரிக்கிறோம். முதலில் பிளாஸ்டிக்கில் தோரணம் தயாரித்தோம். இப்போது பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் பேப்பருக்கு மாறியுள்ளோம். அதோடு மஃப்ளர் துண்டு, தொப்பி மாதிரியானவற்றையும் நாங்கள் தயாரிக்கிறோம். இதில் மஃப்ளர் லூதியானா, டெல்லி மாதிரியான இடங்களிலிருந்து மொத்த விலைக்கு வாங்கி வந்து சில்லறையாக விற்பனை செய்கிறோம்.

முதலில் டி ஷர்ட்டும் தயாரித்து வந்தோம். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் முன்பை போல இப்போது நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. இடையில் கொரோனா சூழல் எங்கள் வாழ்க்கையை திருப்பி போட்டது. கிட்டத்தட்ட பல மாதங்களாக எங்கள் தொழில் முடங்கி இருந்தது. இப்போது தேர்தலுக்கான பரப்புரைகள் சூடுபிடித்துள்ளதால் எங்களுக்கும் ஆர்டர் கிடைக்கிறது. வேலை வேகம் எடுத்துள்ளதால் எங்களுக்கு ஆள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. 

தமிழகம், கேரளா, கர்நாடகா மாதிரியான மாநிலங்களுக்குதான் அதிகளவில் அரசியல் கட்சிகளின் கொடிகள், தோரணங்கள் எல்லாம் இங்கிருந்து விநியோகம் ஆகின்றன" என்கிறார் அவர்.

"ஒரு கட்சிக்கு ரொம்ப முக்கியமே அவங்களோட சின்னத்தையும், கொடியையும் மக்கள் மனசுல நிக்க வைக்கிறதுதான். அதுக்காக கட்சி சார்பாவும், நிர்வாகிங்க சார்பாவும் திருப்பூர்ல இருக்குற எங்கள மாதிரியான ஆடை உற்பத்தியாளர்களுக்கு மொத்தமா ஆர்டர் கிடைச்சுகிட்டு வருது. எங்களோட தொழிலுக்கு இப்போ டிஜிட்டல் தொழில்நுட்பமும் கைகொடுத்து இருக்கறதுனால கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களோட உருவப்படம் இருக்குற டி ஷர்ட், தொப்பி மாதிரியான ஆர்டர்கள் பல பகுதிகளிலிருந்து எங்களுக்கு வந்துகிட்டு இருக்கு. அதுக்கு தான் இப்போ அரசியல் கட்சிகள் மத்தியில அதிக வரவேற்பும் இருக்கு. 

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதிமுக, கம்யூனிஸ்ட், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர்னு வெவ்வேறு கட்சியினரிடமிருந்து ஆர்டர் வரும். இதுக்காக வெள்ளை நிற டி ஷர்டுகள ஸ்டாக் வெச்சிருக்கோம். ஆர்டர் வந்ததும்  அந்த கட்சிக்கு ஏத்தமாதிரி பிரின்ட் செய்து கொடுப்போம். இதை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ராப்பகலா வேல பாத்துகிட்டு வர்றோம்" என்கிறார் திருப்பூரை சேர்ந்த உற்பத்தியாளர் ஒருவர். 

அதே நேரத்தில் தங்களுக்கு போட்டியாக ஸ்க்ரீன் பிரின்டிங் தொழில்நுட்பம் மூலம் கண்ணுக்கு தெரியாத போட்டியாளர்களையும் தேர்தல் நேரத்தில் சமாளிக்க வேண்டி உள்ளதாக சொல்கின்றனர் உற்பத்தியாளர்கள். 

ஆஹா ஓஹோ எலெக்‌ஷன்!

- எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com