டிரெண்டிங்

கீழடி: அகழ்வாராய்ச்சியில் 5 அடி உயர எலும்புக் கூடு கண்டெடுப்பு

Veeramani

கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு முழுமையான மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன மரபியலை அறிவதற்கான மரபணுவியல் சோதனை பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில்  6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. 5கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் நோக்கத்தில் கடந்த 5 கட்ட அகழாய்வு போன்று அல்லாமல் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடத்த திட்டமிடப்பட்டு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6ம் கட்ட அகழாய்வில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள், எடைகற்கள்,  பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மி குளவி,  கொள்கலன்கள், உறை கிணறு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான  தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்  கொந்தகையில் மேற்கோள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இன்று மேலும் ஒரு மனித எலும்புக் கூடுண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த எலும்புக் கூடு,  எத்தனை ஆண்டுகள் பழமையான மனிதருடைய எலும்புக் கூடு என்பது குறித்தும், ஆணா ? பெண்ணா ? என்பது குறித்தும் முழுமையான மரபணுவியல் சோதனைக்கு பிறகே தெரியவரும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக 5 குழந்தைகள்  எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

 இதனிடையே எலும்புக் கூடுகள் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மரபணுவியல் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் கீழடி பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் இன மரபியல் குறித்தும், அவர்களின் உணவு முறை, ஆயுட்காலம், உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்