"மு.க.ஸ்டாலின் ஆகிய நான்..." - திருச்சியில் 7 உறுதிமொழிகளை வெளியிட்டு பேச்சு!

"மு.க.ஸ்டாலின் ஆகிய நான்..." - திருச்சியில் 7 உறுதிமொழிகளை வெளியிட்டு பேச்சு!
"மு.க.ஸ்டாலின் ஆகிய நான்..." -  திருச்சியில் 7 உறுதிமொழிகளை வெளியிட்டு பேச்சு!


தேர்தல் அறிவிப்புக்கு பின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திருச்சியில் திமுகவின் மிகப்பெரிய முதல் பரப்புரை பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 90 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுகவின் கொடியேற்றி தொடங்கி வைத்தார். சுமார் 350 ஏக்கரில் இரவைப் பகலாக்கும் வெளிச்சத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரளானோர் குவிந்திருந்தனர்.
மாலையில் மேடைக்கு வந்த மு.க.ஸ்டாலின், கூட்டத்திற்கு நடுவே 500 மீட்டர் தூர நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த கே.என்நேருவுக்கு நிகர் நேரு தான் என்ற பாராட்டுடன் பேசத் தொடங்கிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்ததாக கூறினார்.

பின்னர் ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அவர் வெளியிட்டார். பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி- சுகாதாரம், சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, ஊரக கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தின் படி, தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூபாய் 4 லட்சத்திற்கும் மேலாக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறினார்.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரி பள்ளிகள், மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதோடு குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும், எஸ்.சி., எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குகான கல்வி உதவித் தொகையை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் கல்வி- சுகாதாரத்திற்கான நிதி மூன்று மடங்கு உயர்த்தப்படும் என்றார். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும், அகன்ற அலைக்கற்றை இணைய வசதி ஏற்படுத்தப்படும் எனவும் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த வாக்குறுதிகளை வீடுதோறும் கொண்டு சேர்ப்போம் என்று கூறிய ஸ்டாலின் மக்களுக்கான ஆட்சியை அமைப்போம் என என்ற வரிகளை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com