கல்வி

கொரோனாவுக்கு பிறகு கல்வி பட்ஜெட்டைக் குறைத்த நாடுகள் பட்டியலில் இந்தியா: உலக வங்கி தகவல்

Veeramani

இந்தியா மற்றும் அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, மியான்மர், நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான தொகையையே பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கியதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கிய பின்னர் கல்வி வரவு செலவுத் திட்டங்கள், குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருமான நாடுகளில் 65 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உயர் மற்றும் உயர் நடுத்தர வருமான நாடுகளில் 33 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டன என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு (ஜிஇஎம்) அறிக்கையுடன் இணைந்து தொகுக்கப்பட்ட இந்த அறிக்கை, குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருமான நாடுகளில் அரசாங்க செலவினங்களின் தற்போதைய நிலைகள், நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்.டி.ஜி) அடைவதற்குத் தேவையானதைவிடக் குறைவு என்று கூறியுள்ளது.

கல்வி வரவு செலவுத் திட்டங்களில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை புரிந்து கொள்வதற்காக, அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள 29 நாடுகளின் மாதிரி தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் "கோவிட்-19-ல் கல்வித்துறையில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், கல்வித்துறைக்கு கூடுதல் செலவுகள் தேவைப்படுகின்றன மற்றும் பள்ளிகள் மூடப்பட்டபோது கல்வி பயின்ற மாணவர்களின் இழப்புகளை ஈடுசெய்யும் திட்டங்களுக்கு நிதியளிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளது.

இந்த அறிக்கைக்காக சேகரிக்கப்பட்ட மாதிரியில் மூன்று குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் (ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, உகாண்டா) உள்ளன; 14 குறைந்த நடுத்தர வருமான நாடுகள் (பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, கென்யா, கிர்கிஸ் குடியரசு, மொராக்கோ, மியான்மர், நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான்); 10 உயர் நடுத்தர வருமான நாடுகள் (அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, ஜோர்டான், இந்தோனேசியா, கஜகஸ்தான், மெக்சிகோ, பெரு, ரஷ்யா, துருக்கி); மற்றும் இரண்டு உயர் வருமான நாடுகள் (சிலி, பனாமா) உள்ளன.

அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, இந்தியா, மியான்மர், நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் 10 சதவீதத்திற்கும் குறைவான தொகையையே கல்விக்காக ஒதுக்குகிறது. ஆனால் மத்திய அரசு ஒதுக்கிய வரவுசெலவுத் திட்டத்தைத் தவிர மற்ற முக்கிய நிதி ஆதாரங்களும் இருக்கக்கூடும் என தெரிவித்திருக்கிறது. பள்ளி அமைப்புகள் பாதுகாப்பாக மீண்டும் திறக்க அனுமதிக்க போதுமான நிதி தேவைப்பட்ட போதிலும், மாதிரியில் உள்ள பாதி நாடுகள் தங்கள் கல்வி வரவு செலவுத் திட்டங்களைக் குறைத்துள்ளன." என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருமான நாடுகளில் உள்ள குடும்பங்கள் மொத்த கல்வி செலவினங்களில் உயர் நடுத்தர மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளை விட அதிகமான பங்கை வழங்க முனைகின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தரவு குறைவாக இருந்தாலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கல்வி செலவு அதிகரித்துள்ளது . அதே நேரத்தில் தொற்றுநோயால் பல வீடுகளுக்கு வருமான குறைப்பு மற்றும் எதிர்மறை வருமானம் மற்றும் சுகாதார பெரும் செலவுகள் போன்றவை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த அறிக்கை கூறியிருக்கிறது.