தூத்துக்குடி: துப்பாக்கிகள்..சேட்டிலைட் போன்.. ரூ.500கோடி போதைப் பொருளுடன் சிக்கிய படகு!

தூத்துக்குடி: துப்பாக்கிகள்..சேட்டிலைட் போன்.. ரூ.500கோடி போதைப் பொருளுடன் சிக்கிய படகு!
தூத்துக்குடி: துப்பாக்கிகள்..சேட்டிலைட் போன்.. ரூ.500கோடி போதைப் பொருளுடன் சிக்கிய படகு!

தூத்துக்குடி கடல் பகுதியில் ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். இதில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கும் என்பதால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளதா, ஏதேனும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கடலோர காவல்படையினர் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். அப்போது கன்னியாகுமரியிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் இலங்கையை சேர்ந்த ஒரு படகு வந்தது. அந்த படகில் 6 பேர் இருந்தனர். இதனால் கடலோர காவல்படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த விசைப்படகில் உள்ள ஒரு காலி டீசல் டேங்க்கில் 99 போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருந்தன. இதில் சுமார் 100 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் படகில் 20 சிறிய பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த 3 கிலோ கிறிஸ்டல் மெத்தலின் பீட்டாமைன் போதைப் பொருளையும் 5 துப்பாக்கிகளையும் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.


இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.500 கோடி என்றும் மெத்தலின் பீட்டாமைன் போதைப் பொருளின் மதிப்பு ரூ.100 கோடி என்றும் கூறப்படுகிறது. மேலும் 2 சேட்டிலைட் செல்போனை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். பிரீபெய்டு வகையை சேர்ந்த இந்த செல்போன் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை கடலோர காவல்படை ரோந்து கப்பலில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் அவர்கள் 6 பேரும் இலங்கை நீர்க்கொழும்பை சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல் (40), வானகுலசூரிய ஜீவன் (30), சமீரா (32), ஜீவன் பிரசன்னா (29), நிசாந்த் கமகே (46), மற்றும் லட்சுமணகுமார் (37) என்பது தெரியவந்தது.


இவர்கள் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியில் ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கிருந்து போதை பொருட்களை வாங்குவதற்காக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு சென்றுள்ளனர். அதே நேரத்தில் ஈரானில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஒரு பாய்மரப் படகில் போதைப் பொருளை ஏற்றி வந்து, நடுக்கடலில் வைத்து படகில் ஏற்றி உள்ளனர். அதன்பிறகு 6 பேரும் போதைப் பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கடல் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக படகின் ஒரு டீசல் டேங்கில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் டீசல் காலியாகி மேற்கொண்டு படகை இயக்க முடியாமல் தவித்துள்ளனர். அப்போது காற்றின் வேகத்தில் அந்த படகு இந்திய கடல் பகுதிக்குள், அதாவது கன்னியாகுமரியில் இருந்து 10 கடல்மைல் தொலைவுக்குள் வந்துள்ளது. அப்போதுதான் கடலோர காவல்படையினரிடம் சிக்கியுள்ளனர்

இதைத் தொடர்ந்து கடலோர காவல்படையினர் கைது செய்யப்பட்ட 6 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சர்வதேச அளவில் நடந்து வந்ததால் இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com