
முகமது சுஹாரி.. இஸ்ரேல் - ஹமாஸ் படைக்குழுவுக்கு இடையேயான ரணக்கொடூர தாக்குதலில் இந்த பெயர் மீண்டும் உச்சரிக்கப்பட காரணம் என்ன? உலகத்தின் முன்னணி உளவு அமைப்பை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக ஹமாஸ் பதிலடி கொடுக்க முகமது சுஹாரி செய்த உதவி என்ன? உண்மையில் யார் இந்த முகமது சுஹாரி போன்ற கேள்விகளுக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு!
1973ல் இதே அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே மூண்ட 21 நாள் போரின் போது 6 வயது சிறுவனாக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான் முகமது சுஹாரி. அம்மாவின் முதுகில் அமர்ந்துகொண்டு பள்ளி சென்ற அந்த 6 வயது சிறுவன் அடுத்த 40 ஆண்டுகள் கழித்து இஸ்ரேலுக்கு பேரிடியாக மாறுவான் என்று உண்மையில் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சிறுவயது முதலே பொறியியலில் ஆர்வம் கொண்ட முகமது சுஹாரி துனிசியாவில் பிறந்தவர். இஞ்சீனியரிங்கில் இருந்த அதீத ஆர்வத்தால் வான்வெளி பொறியியல் பட்டம் பெற்ற சுஹாரி பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
சுமார் 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பயணித்த அவர், போரில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானத்தை கண்டுபிடிப்பதிலும், கடல் நீரில் ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை கண்டுபிடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டினார். தனது ஆய்வு பசிக்கு தீனி போட 1991ம் ஆண்டு துனிசியாவில் இருந்து வெளியேறிய இவர், ட்ரோன் கண்டுபிடிப்பில் தன்னை ஆகச்சிறந்த இஞ்சீனியராக மாற்றியிருந்தார். பலநாடுகளின் கவனத்தை ஈர்த்த சுஹாரியை, 2006ம் ஆண்டு தனது படைக்குழுவில் ட்ரோன் இஞ்சீனியராக சேர்த்துக்கொண்டது காசாவின் ஹமாஸ் படை. இவரது வருகை குறித்து பேசிய ஹமாஸ் படைக்குழு, காசா மட்டுமல்ல, வேறு எங்கும் இல்லாத தொழில்நுட்ப ரீதியான அறிவு முகமது சுஹாரிக்கு இருந்தது என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் வலிமையான உளவுப்படையாக விளங்கும் மொசாத்தை வைத்திருக்கும் இஸ்ரேலையே ஆட்டம் காண வைக்கும் விதமாக நடந்த ஹமாஸின் தாக்குதல்களுக்கு முகமது சுஹாரியின் கண்டுபிடிப்புகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் அளவுக்கு ஹமாஸ் படையில் தொழில்நுட்ப ரீதியான ஆயுதங்கள் இல்லையெனினும் ஆளில்லா ட்ரோன்களை ஹமாஸுக்கு உருவாக்கித்தந்தார் சுஹாரி. 2014ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்த போரின்போது, சுஹாரியின் கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கு வகித்தன.
1991ம் ஆண்டு தனது தாய்நாடான துனிசியாவில் இருந்து வெளியேறிய முகமது சுஹாரி 2011ல் மீண்டும் தாயகம் திரும்பியிருந்தார். ஹமாஸ் அமைப்பின் ஆயுத அமைப்பில் பெரிய மாற்றங்களை கொண்டுவந்த முகமது சுஹாரி, நீருக்குள் ஆயுதத்தை ஏந்திச்சென்று தாக்கும் ட்ரோன் அமைப்பை கிட்டத்தட்ட நிறுவியிருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் 2016ம் ஆண்டு தனது வீட்டுக்கு வெளியே காரில் உட்கார்ந்திருந்த சுஹாரியை சுட்டுக்கொன்றது முகமுடி அணிந்த குழு ஒன்று. நீண்ட சைலன்ஸர்களிலிருந்து பாய்ந்த 20 குண்டுகள் சுஹாரியின் உடலில் ஊடுறுவி உயிரை பறித்திருந்தது. ரத்த வெள்ளத்தில் கார் சீட்டில் அமர்ந்தபடி இறந்துபோனார் முகமது சுஹாரி.
சுட்டுக்கொன்ற குழுவில் இருந்தவர்கள் 11 பேர். அதில் 3 பேர் துனிசியர்கள். மற்றவர்கள் வெளிநாட்டினர். சுஹாரியை கொல்ல மிகப்பெரிய அளவில் திட்டம் தீட்டி படுகொலை செய்தது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் என்று உறுதிப்பட கூறியது ஹமாஸ். இந்த குழுவில் இருந்தவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்ட செய்திகளும் பின்னாட்களில் வெளிவந்தன. ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூளையாக விளங்கிய சுஹாரி கொல்லப்பட்டாலும், அவரது படைப்புகள் இன்றளவும் ஹமாஸ் படையினருக்கு பெரிய அளவில் பயனளித்து வருகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தற்போது நடந்துவரும் போரில் கூட, சுஹாரி உருவாக்கிய ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் 35 ட்ரோன்கள் ஏவப்பட்டு வெடிக்கவைக்கப்பட்டதாக மார்தட்டி சொல்லியிருக்கிறது ஹமாஸ் படைக்குழு. இஸ்ரேலுடன் போராடி வரும் தங்களுக்கு முகமது சுஹாரி செய்த உதவியை ஹமாஸ் என்றும் மறவாது என்பதில் சந்தேகமில்லை..
சுஹாரி உருவாக்கிய ஒரு சர்ப்பரைஸ் ஆயுதத்தைத்தான் அடுத்தடுத்த நாட்களில் பயன்படுத்தப்போகிறதாம் ஹமாஸ். அது என்ன வேறொரு செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
எழுத்து - யுவராம் பரமசிவம்