காஸாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே, காஸா பகுதியில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு தரைவழி தாக்குதல் தொடங்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில் அங்குள்ள பாலஸ்தீனியர்களின் கதி பரிதாபமான நிலையில் உள்ளது. இந்நிலையில் காசாவின் வடக்குப்பகுதியில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதலை தொடர்ந்து தரைவழித் தாக்குதலை தொடங்க திட்டமிட்டுள்ளதால் இஸ்ரேல் இவ்வாறு கூறுவதாக யூகிக்கப்படுகிறது.
ஆனால் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் வெளியேறினால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஐநா எச்சரித்துள்ளது. அதே நேரம் இஸ்ரேல் ஏதோ தந்திரம் செய்கிறது என்றும் பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கலாம் என்றும் ஹமாஸ் அமைப்பினர் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.