இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு வாரங்களாக நீடித்து வருகிறது. இந்த போரில் பல சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. அதேசமயம் பாலஸ்தீனின் ஹமாஸ் படைக்குழுவுக்கு ஆதரவு தரும் நாடுகள் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாகவே ஆதரவுக்கரம் நீட்டுகின்றன.
இந்நிலையில், காஸா மீதான கோர தாக்குதலை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தது சீனா. கடந்த 7ம் தேதி போர் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் இதனை கண்டித்த சீனா, உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்று கூறியது.
எகிப்து மற்றும் பிற நாடுகளை ஒருங்கிணைக்க தயார் என்றும் அறிவித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், பாலஸ்தீன பிரச்னைக்கு விரைவில் ஒரு நியாயமான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். குறிப்பாக இதுபோன்ற கடினமான காலங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவு இல்லை என்றது சீனா. இப்படியாக இருந்த சீனாவின் நிலைப்பாட்டில் இப்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங், “ஒவ்வொரு நாட்டிற்கும் தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளது. ஆனால் அது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்குள் வரவேண்டும். தீவிரமடையும் மோதலால் ஏற்படும் உயிரிழப்புகள் கவலையளிக்கிறது” என்றுள்ளார்
இதன்மூலம் பொதுமக்களை பாதிக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது என்று நிலைப்பாட்டை சீனா மாற்றியுள்ளது. இந்த வார இறுதியில் சீன அமைச்சர் அமெரிக்கா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.