தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் பேசியதாக தெரிவித்த ஓபிஎஸ், அணிகள் இணைப்பு குறித்து அவரிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தேன். தமிழக அரசின் நிலைப்பாடு, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசினோம். தமிழக மக்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்க உள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
அணிகள் இணைப்பு குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், ’தமிழகத்தில் நிலவும் பொதுவான அரசியல் சூழல் குறித்தே பேசினோம். மற்றொரு கட்சியின் உள்விவகாரங்களில் பிரதமர் தலையிடுகிறார் என்ற கருத்து குறித்து பேசுவதை நாம் நிறுத்த வேண்டும். தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளைத் தீர்வு காணும் வகையில் பிரதமரைச் சந்தித்துப் பேசினோம்’ என்று மைத்ரேயன் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உடனிருந்தார்.