பாஜக 160 கிமீ வேகத்திலே சென்றால், எதிர்க்கட்சி 60-ல் செல்கிறது - தெளிவாக விளக்கிய சிவப்ரியன் | Bihar
243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது.. முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் NDA கூட்டணி முன்னணி பெற்றுள்ளது. இந்த மிகப்பெரிய முன்னிலையை பற்றி பத்திரிகையாளர் சிவப்ரியன் புதிய தலைமுறையில் பகிர்ந்தது "நிதிஷ் குமார் மற்றும் பிஜேபி மேல் மக்களுக்கு உள்ள Vote of confidence, அப்படித்தான் இதை பார்க்கிறேன். நலன் சார்ந்த அரசியல், சமூக கட்டமைப்பு இரண்டும் இருந்து அதனுடன் வாக்குச்சாவடி நிர்வாகம் மற்றும் நுட்பமான அரசியல் வேலைகள் செய்தால் எதுவும் சாத்தியம் என்பதை தான் இந்த தேர்தல் நமக்கு காட்டுகிறது. இதில் குறிப்பிட வேண்டியது, நிதிஷ் குமாரின் அபாரமான வளர்ச்சி.
இதில் இவர்கள் பின்பற்றிய வியூகம் மற்ற கட்சிகளுக்கான பாடம். சீட் எத்தனை என்பதையோ, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதையோ அறிவிக்காமல் பொதுக்கூட்டங்களையே நடத்திக் கொண்டிருந்தால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது. பிஜேபி என்பது எல்லா இடங்களிலும் சொல்லும்படி தேர்தலை வெல்லும் விஷயம். அந்த கார் 160 கிமீ வேகத்தில் செல்கிறது, ஆனால் எதிர்க்கட்சிகள் அப்பாஸிடர் காரில் செல்வது போல 80 கிமீ வேகத்தில் சென்று அந்தக் காரை முந்தி செல்வோம் என சொன்னால் எப்படி முடியும்? அதற்கான உழைப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.
SIR என்பது பிரச்னை தான். தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக இருக்கிறதா? ஆம். நிறைய இடங்களில் தேர்தல் ஆணையம் எண்ணிக்கையை கூட இன்னும் கொடுக்கவில்லை. எல்லாமே உண்மைதான். ஆனால் அந்த பிரச்சனையை, தேர்தல் பிரச்சனையாக கொண்டு சென்றால், பிரச்சனைகள் வரும். NDA வில் எல்லோருக்கும் 10 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள், மேலும் 2 லட்சம் கொடுத்து சுயதொழில் செய்ய உதவுவோம் எனவும் சொல்லி இருக்கிறார்கள். இது போக எக்காரணத்தை கொண்டும் பிகாரில் மதுவிலக்கை எடுக்க மாட்டோம் என்கிறார்கள். இதில் கள்ளச்சாரா சாவுகள் என்ற பின்னடைவு இருந்தாலும், அதை ஒரு விஷயமாக தலை எடுக்கவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
இண்டியா கூட்டணி முன்வைத்த பிரச்சனைகள் எதையும் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வேலையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சனை, தேர்வுகளில் நடக்கும் ஊழல் பெரிய பிரச்னை, இதனை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். அதை தாண்டியும் இவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு தேர்தலில் வெல்வது எப்படி என தெரிந்து இருக்கிறது. அந்த ரகசியத்தை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அதே சமயம் இவர்கள் கூட்டணியில் சிக்கல் இல்லாமல் இல்லை. ஆனால் இண்டிய கூட்டணியில் இருந்த சிக்கல்கள் மிக வெளிப்படையாக தெரிந்தது. ஜூன், ஜூலை, ஆகஸ்டில் அவர்களிடம் இருந்த உற்சாகம் செப்டம்பர், அக்டோபரில் இல்லை. எப்படியும் உங்களுக்கு தேஜஸ்வி தான் முதலமைச்சர் வேட்பாளர் என தெரிகிறது. அதை அக்டோபருக்கு பதில் ஜூனில் அறிவித்திருந்தால் வேலை இன்னும் சிறப்பாகி இருக்கும்" என்றார்.

