அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் இரண்டு தமிழக அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால், அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக மூன்று அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில், டிடிவி தினகரன் பங்கேற்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோரின் பெயர்கள் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து விரைவில் விளக்கம் அளிப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அழைப்பிதழை பார்த்த பின்னர் பதிலளிப்பதாக ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.