
இன்றைய உலகம் இணையதளத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அதன் வாயிலாக புதுப்புது தளங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முக்கியமாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயனர்களுக்கு அதிகளவு பயன்களை அள்ளித் தருவதுடன், புதுப்புது வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது. அந்த வகையில், ட்விட்டருக்குப் போட்டியாக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் Text-ஐ மையமாகக் கொண்டு ஒரு புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு இறுதியில் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கினார். அந்த நிறுவனத்தை வாங்கிய நாள்முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறார். ஆட்குறைப்பு, தளத்தில் மாற்றங்கள் எனப் பல புதிய மாற்றங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார். இது, ட்விட்டர் பயனர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால், ட்விட்டர் தளத்தின் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில்தான் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் தரப்பில் டெக்ஸ்ட் அடிப்படையிலான செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதுகுறித்து இன்ஸ்டா தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்தச் செயலி இன்ஸ்டாவில் இருந்து முற்றிலும் தனித்து இயங்கும் என்றும், இன்ஸ்டா பயனர்கள் தங்களது இன்ஸ்டா கணக்கு மூலம் இந்த புதிய செயலியை பயன்படுத்த முடியும் என்றும், இது ட்விட்டருக்கு மாற்றாக உள்ள தளங்களுக்கு போட்டியாக விளங்கும் என்றும், வரும் ஜூன் மாதத்தில் இந்த செயலி அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனை ட்விட்டர் போன்று ஒரு செய்தி பகிரும் தளமாக கொண்டுவர இருப்பதாகவும், இதன் மூலம் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்றும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை, ட்விட்டருக்கு இணையாக, இச்செயலி அறிமுகம் செய்யப்பட்டால், அது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.