
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி மற்றும் கருமாத்தூரில் அமமுக கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தொண்டர்களிடம் பேசிய அவர்... “அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கவே நானும் ஒபிஎஸ்-ம் இணைந்துள்ளோம். ஜாதிக்காக ஒன்றிணைந்துள்ளோமா? அப்படி இணைந்திருந்தால் நாங்கள் எப்போதுமே கை கோர்த்து தானே இருக்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமி கம்பெனி இப்படி ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர். நான்கு பேரை வைத்துக் கொண்டு வட்டார கட்சியாக ஜாதி கட்சியாக அக்கட்சியை நடத்தி வருவதே பழனிசாமி கம்பெனி தான்.
நான்கு ஆண்டுகளில் கிடைத்த மக்களின் வரிப்பணத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்கு மாத சம்பளம் போல கொடுத்து கொண்டு கட்சியை நடத்தி வருகிறார். இரட்டை இலை அங்கு இருப்பதைக் காட்டி அம்மாவின் தொண்டர்களை ஏமாற்றி வருகிறார்கள். நிறைய நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு ‘இரட்டை இலையும், கட்சி பெயரும் ஒட்டிக் கொண்டிருப்பதால் ஒட்டிக் கொண்டிருக்கிறோம். அதை காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் வந்துவிடுகிறோம்’ என சொல்கிறார்கள்.
பழனிசாமி கையில் சின்னம் இருப்பது கட்சிக்கே அவமானமாக உள்ளது, புரட்சி தலைவருக்கு, கருணாநிதி இழைத்த துரோகத்தின் காரணமாக அதிமுகவை உருவாக்கினார். அந்த இயக்கத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் துரோகத்தை மட்டுமே முதலீடாக கொண்டு பணபலத்தால் இன்றைக்கு அந்த கட்சியில் பதவிக்கு வந்து அமர்ந்திருக்கிறார். அதை எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் சரி அம்மாவின் ஆன்மாவும் சரி மன்னிக்க மாட்டார்கள். அமமுக தொண்டர்கள் மூலம், இவர்கள் வரும் காலத்தில் தக்க தண்டனையை தருவார்கள்.
பழனிசாமியின் ஆட்சியில் அவர் செய்த தவறான ஆட்சியால் தமிழ்நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து திமுக திருந்தி இருக்கும் என்று அவர்கள் கையிலே ஆட்சியை கொடுத்து விட்டார்கள், இன்று திமுக திருந்தி இருக்கிறதா? தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதியை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டனர். இரண்டு வருடம் ஆகிவிட்டது. வீட்டு பெண்மணிகளுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் என்றவர்கள், இப்போது அதில் ‘தகுதி உள்ளவர்களுக்கு’ என புதுக்கதை விட்டுக் கொண்டிருக்கின்றனர். போதை கலாச்சாரம் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கின்றது. கள்ளச் சாராய சாவுகள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரும் அவரது குடும்பம் மாத்திரம் வாழ்தால் போதும் என ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் விவசாயிகளாக இருக்கட்டும், ஏழை எளிய தொழிலாளர்களாக இருக்கட்டும் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஐந்து ஆண்டுகளில் ஒரு ஆட்சி பெற வேண்டிய கெட்ட பெயரை எல்லாம் திமுக 24 மாதங்களிலேயே பெற்றிருக்கிறது. ஸ்டாலின் அவர்கள் பழனிசாமியின் துணையோடு இன்றைக்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பழனிசாமி நயவஞ்சக தனத்தால் அம்மாவின் தொண்டர்களை பிரித்தாள்கிறார். இந்த இயக்கத்தை பிளவு படுத்துவதன் மூலம் பழனிசாமி திமுகவிற்கு உதவி செய்கிறார் என்பது தான் உண்மை.
அப்படி உதவிசெய்ய காரணம், கடந்த நான்கு ஆண்டுகளில் இவர்கள் செய்த தவறுகளை ஸ்டாலின் அவர்கள் வழக்கு தொடுத்து கைது செய்து விடுவார் என்கிற பயம்தான். ஸ்டாலினுக்கு உதவி செய்கின்ற விதமாகத்தான், நான்கு ஆண்டு ஆட்சி தொடர உதவி செய்த பன்னீர் செல்வம் உள்பட பலரை நீக்கி, கட்சியையே இன்று நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறார். தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் இன்னும் முழுதாக அதிமுக-வை பழனிசாமி தரப்பிடம் கொடுக்கவில்லை. இடைக்காலமாக கொடுத்துள்ளது. அதை வரும் காலத்தில் நாங்கள் மீட்டெடுப்போம். பன்னீர் செல்வம் நீதிமன்றம் மூலம் அதை பெற்றெடுப்பார். அதை ஜனநாயக ரீதியாக அமமுகவும், ஒபிஎஸ்-ம் இணைந்து மீட்டெடுப்போம்.
இன்று பழனிசாமி கையில் உள்ள இரட்டை இலை அதன் தகுதியை இழந்து வருகிறது, பழனிசாமி கையில் தற்காலிகமாக அந்த சின்னம் முடக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பழனிசாமிக்கு இரட்டை இலை என்று வந்தால் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் கட்சிக்கே மூடுவிழா நடத்தி விடுவார்கள். அதனால் மீண்டும் அதை மீட்டெடுக்க தான் அமமுக உருவாகி உள்ளது” என பேசினார்.