திருச்சி: ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை – மனஉளைச்சலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை – மனஉளைச்சலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
Published on

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வில்சன் (26). டீக்கடையில் வடை போடும் மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், இந்த விளையாட்டின் மூலம் 4 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த வில்சன் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். அதை பார்த்து அவரது வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வையம்பட்டி காவல்நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சவம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். இதன்மூலம் இலவச ஆலோசனைகள் பெறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com