கர்நாடகாவில் தமிழக லாரியை நிறுத்தி கட்டப்பட்ட ‘கர்நாடக கொடிகள்’
கர்நாடகாவில், தமிழக பதிவெண் கொண்ட லாரியை வழிமறித்து, அந்த மாநில கொடியை கட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து தமிழகம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தில், அம்மாநில கொடிகட்டி வந்ததாகவும், அந்த கொடியை தமிழக காவல் துறையினர், வலுக்கட்டாயமாக அகற்றியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே சென்றுகொண்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரியை மறித்து மூன்று பேர் கொண்ட கும்பல், அந்த லாரியில் கர்நாடக மாநில கொடியை கட்டியுள்ளனர்.
பின்னர் ஒட்டுனரை ஜெய் கன்னடா என்று கூற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். ஓட்டுனர் தனக்கு கன்னட மொழி தெரியாது எனக் கூறியும், தொடர்ந்து அந்த நபர்கள் ஒட்டுனரை வற்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவங்களை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர்.