
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் பூதிப்புரம் கிராமம் வீரசின்னம்மாள் புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் கமலேஸ்வரன் (18). நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் கமலேஸ்வரன் வீடு திரும்பாததால், அவரது தாய்மாமன் நாகரத்தினம், பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், வீரசின்னம்மாள் புரத்தில் உள்ள கர்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், பாழடைந்த கிணறுக்கு அருகே இரண்டு நாட்களாக ஒரு இருசக்கர வாகனம் நின்றிருப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பழனி செட்டிபட்டி போலீசார், அப்பகுதியில் பார்த்தபோது இளைஞர் ஒருவர் கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து அங்கு அழைத்துவரப்பட்ட கமலேஸ்வரனின் தாய்மாமன் நாகரத்தினம், சடலமாக கிடப்பது கமலேஸ்வரன் தான் எனவும், அந்த வாகனம் கமலேஸ்வரனுடையது எனவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கமலேஸ்வரனின் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்த பழனிசெட்டிபட்டி போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை துவங்கியுள்ளனர்.