"என் வீட்டுக்கும் ED ரெய்டு விட சொல்றாங்க" - ஜெகதீஷனின் நண்பன் ஃபயாஸ்தீன்
நீட் தேர்வு ரத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. மதுரையை தவிர்த்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் இன்று உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். மதுரையில் அதிமுக மாநாடு நடக்க இருப்பதால் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த சில தினங்கள் முன் நீட் தேர்வில் இரு முறை ஏற்பட்ட தோல்வியின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஷ்வரனின் நண்பர் ஃபயாஸ்தீன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வை கொண்டுவர அவர்கள் சொன்ன பிரதான காரணம் திறமையான மருத்துவ மாணவர்கள், மருத்துவப் படிப்பில் பணம் அதிகளவு நடமாடுவதை தடுப்பது என்றனர். அவர்கள் இந்த ரெண்டையும் செய்யவில்லை” என்றார்.