
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின், ‘மய்யம் விசில்’ செயலிக்கு இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது
அரசியல் களத்தில் இறங்கி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் கடந்த ஏப்ரல் 30 தேதி ‘மய்யம் விசில்’ ஆப் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். வசிக்கும் பகுதிகளில் நடக்கும் தவறுகளையும், பிரச்னைகளையும் இந்தச் செயலியில் பதிவு செய்தால் அதன் உண்மை தன்மை ஆராய்ந்த பிறகு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு அது கொண்டு செல்லப்படும் என்பது இந்தச் செயலியின் செயல்பாடாக அறிவிக்கப்பட்டது.
செயலி அறிமுகத்தின் போது பேசிய கமல்ஹாசன், ''மய்யம் விசில் ஆப் பிரச்னைகளை தீர்க்கும் மந்திர கோல் அல்ல. இது காவல்துறைக்கு உதவும், விமர்சனம் செய்யக்கூடியதாகவும் இருக்கும். போலீஸுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ இது மாற்று அல்ல” என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ‘மய்யம் விசில்’ செயலிக்கு ‘மொபைல் மார்க்கெட்டிங் அசோசியேஷன்’ என்ற அமைப்பு இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளிப் பதக்கம் வழங்கி சிறப்பித்துள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “வணிக நோக்கமில்லாமல், சமூக தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக ‘மய்யம் விசில்’ செயலிக்கு இந்தியாவின் சிறந்த செயலிக்கான “வெள்ளிப் பதக்கமும்”, புவிசார்ந்த தகவல் தொடர்பு சேவையில் “வெண்கலப் பதக்கமும்” பெற்றுள்ளது.
ஒரு அரசியல் கட்சியாக இதுவரை யாருக்கும் கிடைத்திராத அங்கீகாரம். மக்கள் பிரச்னைகளை கருத்துடன் அணுகி, அதை தீர்ப்பதற்கு ‘மய்யம் விசில்’ செயலியைப் பயன்படுத்தி, இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திடக் காரணமாகிய எங்கள் களவீரர்களுக்கும், கள வீராங்கனைகளுக்கும் நன்றி'” என்று தெரிவித்துள்ளார்.