
கொளப்பாக்கம் தனியார் பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த பஸ் கிளீனரை பெற்றோர் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எல்.கே.ஜி., முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களை பள்ளி வாகனங்களில் பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். இதில் எல்கேஜி மற்றும் யூகேஜி படிக்கும் மாணவர்களை அழைத்தும் செல்லும் பள்ளி பேருந்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளாத புகார் எழுந்துள்ளது.
ஒரு மாணவி பள்ளிக்கு, பள்ளி வாகனத்தில் செல்ல மாட்டேன் என்று பெற்றோரிடம் கூறி உள்ளார். பெற்றோர் விசாரித்ததில் பள்ளி வேனில் அட்டன்டராக வேலை செய்யும் பாஸ்கரன் என்பவர் உடலின் சில இடங்களில் தொட்டு சில்மிஷம் செய்வதாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை பெற்றோர் அடித்து உதைத்து பள்ளியில் கொண்டு வந்து ஒப்படைத்தனர். மேலும் இந்த நபர் பள்ளி சிறுமிகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து அறிந்த 200-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பாஸ்கரை பிடித்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த மாங்காடு காவல்துறையினர் பாஸ்கரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருவதோடு பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில் சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த பாஸ்கர், இதனை வெளியில் பெற்றோரிடம் கூறினால் பாம்பு கடிக்கும், பூச்சி கடிக்கும் என்று மிரட்டி வைத்துள்ளார். மேலும் பாஸ்கர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு இதனை கவனிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.