நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் அரசியலுக்கு வருவது பற்றி பேசிய பேச்சின் முழு விவரம் வருமாறு:
ரசிகர்களை எப்படி பாராட்டன்னு தெரியலை. கட்டுப்பாட்டோடு நீங்க இருந்ததில் மகிழ்ச்சி. இந்தக் கட்டுப்பாடு, ஒழுக்கம் மட்டும் இருந்தா போதும். நாம என்ன வேணா சாதிக்கலாம். ரொம்ப பில்டப் ஆகிடுச்சுல்ல? நான் பில்டப் கொடுக்கலைங்க. எனக்கு அரசியலுக்கு வருவதை பார்த்து பயமில்லை. மீடியாவை பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள்லாம் மீடியா பார்த்து பயப்படறாங்க. நான் குழந்தை. எனக்கு எப்படியிருக்கும்? நான் ஏதாவது சொன்னா, விவாதமாயிடும். சோ சார் வந்து என்னை ரொம்ப பயமுறுத்தி வச்சிருக்காங்க, மீடியாகிட்ட பார்த்து பேசுங்கன்னு. இந்த நேரத்துல அவர் பக்கம் இருந்தா, பத்து யானை பலமா எனக்கு இருந்திருக்கும். அவர் ஆத்மா எப்போதும் எங்கூட இருக்கும். சரி, விஷயத்துக்கு வர்றேன். ’உன் கடமையை செய். மத்ததை நான் பார்த்துக்கிறேன். யுத்தம் செய். ஜெயிச்சா நாடாளுவே. யுத்தம் செய்யாம போயிட்டா, உன்னை கோழைன்னு சொல்வாங்க’ன்னு கண்ணன் குருஷேத்திரத்துல அர்ஜூனன்கிட்ட சொல்லியிருக்கார். அதனால நான் எல்லாத்தையும் செஞ்சு முடிஞ்சுட்டேன். இனி, அம்பு விடறதுதான் பாக்கி.
நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டமன்ற தோர்தலில் நான் தனிகட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன். நான் பணத்துக்கோ, புகழுக்கோ, அரசியலுக்கு வரவில்லை. நான் கனவுல கூட நினைக்காத அளவுக்கு அதை ஆயிரம் மடங்கு கொடுத்திருக்கீங்க. பதவி ஆசை இருந்திருந்தா 1996-லேயே வந்திருந்தேன். 45 வயசிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயசுல வருமா? வேறு எதற்கு அரசியலுக்கு வருகிறேன்? அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சுங்க. ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சு.
கடந்த ஒரு ஆண்டில் சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வச்சிருச்சு. இந்த சூழ்நிலையை ஒரு முயற்சி எடுக்கலைன்னா, அந்த குற்ற உணர்ச்சி என்னை சாகிற வரைக்கும் துன்புறுத்தும்.அரசியல் மாற்றத்துக்கு நேரம் வந்தாச்சு. சிஸ்டத்தை மாற்றணும். உண்மையான , வெளிப்படையான ஜாதி மதத்துக்கு அப்பாற்றப்பட்ட ஆன்மிக அரசியலை கொண்டுவரணும். அதுதான் என் நோக்கம். அது தனி மனிதனால் முடியாது. இது சாதாரண விஷயமில்லைன்னு எனக்கு தெரியும். ஆண்டவன் அருள், மக்கள் நம்பிக்கை, அவங்க அபிமானம், அவங்க அன்பு, ஒத்துழைப்பு இருந்தாதான் இதை சாதிக்க முடியும். அது எனக்கு கிடைக்கும்னு முழு நம்பிக்கை இருக்கு.
பழைய காலத்துல ராஜாக்கள் இன்னொரு நாட்டுல யுத்தத்துல ஜெயிச்சா, அந்த அரண்மனை கஜானாவை கொள்ளையடிப்பாங்க. அந்தப் படைவீரர்கள் நாட்டு மக்களை கொள்ளையடிப்பாங்க. ஆனா, ஜனநாயகத்துல சொந்த நாட்டிலேயே பல விதத்துல கொள்ளை அடிக்கிறாங்க. அதை மாத்தணும். இதுக்கு எனக்கு தொண்டர்கள் வேண்டாம். காவலர்கள் வேணும். அவங்க உழைப்பால ஆட்சி அமைத்தால் அடிதட்டு மக்களுக்கு சேர வேண்டிய உரிமைகள், சலுகைகளை சேரவிடாமல் தடுக்கிறவர்களை கண்டு பிடிக்கிற காவலர்கள் வேணும். சுயநலத்துக்காக எம்.பி.கிட்டேயோ, மினிஸ்டர்கிட்டேயோ நிற்காத காவலர்கள் வேணும். யார் தப்பு செஞ்சாலும் தட்டிக் கேட்க காவலர்கள் வேணும். அந்த காவலர்களை கண்காணிக்கிற பிரதிநிதிதான் நான்.
முதல்ல காவலர்கள் படை வேணும். அதை நாம உருவாக்கணும். என் மன்றங்கள் கிராமத்துல இருந்து நகரங்கள் வரை, ஆயிரக்கணக்குல இருக்கு. பதிவுசெய்யாதது அதுக்கு மேல இருக்கு. அவங்களை ஒருங்கிணைக்கணும். நீங்க உங்க சுற்றி இருக்கிறவங்களை இந்த மன்றதுக்குள்ள கொண்டு வரணும். ஒவ்வொரு தெருவுக்குள்ளயும் நம்ம மன்றங்கள் இருக்கணும். இது நான் கொடுக்கிற முதல் பணி. அதுவரை நாம அரசியல் பேச வேண்டாம். யாரையும் குறை சொல்ல வேண்டாம். நமக்கு நீந்த தெரியும். குளத்துல இறங்கின பிறகு நீந்தலாம். சட்டமன்ற தேர்தல் என்னைக்கு வருதோ, அன்னைக்கு கட்சி ஆரம்பித்து, என்ன செய்யப் போறோம்னு எடுத்து சொல்லி, செய்யலைன்னா, 3 வருஷத்துல ராஜினாமான்னு சொல்லி மக்கள் மத்தியில் போவோம். எங்கள் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. எங்கள் கொள்கை, நல்லதை நினைப்போம், நல்லதை பேசுவோம், செய்வோவ். நல்லதே நடக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் நம் ஜனநாயக படையும் இருக்கும்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.