ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாகவே இருக்கும்; நடைமுறையில் சாத்தியமில்லை- வைகோ

"ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஜான் பீட்டர் என்பவரின் குடும்பத்தில் ஜெபம் செய்யக்கூடாது என்று இந்து முன்னணியினர் அவர்களை தாக்கி கலவரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்"- வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோPT

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

”தமிழக அரசுக்கு கேடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடர், சரித்திர பிரசித்தி பெற்ற கூட்டத்தொடர் ஆகும். ஏனெனில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பாராளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது. இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அதில் தனி ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஜான் பீட்டர் என்பவரின் குடும்பத்தில் ஜெபம் செய்யக்கூடாது என்று இந்து முன்னணியினர் அவர்களை தாக்கி கலவரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அரசாங்கம் உடனடியாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக வேறு மதத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மோடியால்தான் சாத்தியம் என அமித்ஷா கூறி இருப்பது குறித்த கேள்விக்கு

”ஒன்பது ஆண்டு காலமாக என்ன செய்தார்கள்? இப்போது தேர்தல் வருவதால் இதை கொண்டு வந்தார்கள் தவிர இது நீண்ட கால கோரிக்கை. ஒன்பதாண்டு கால ஆட்சியில் இது தெரியவில்லையா, இதில் அவர் பெருமை கொண்டாட முடியாது”

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்விக்கு

”அது நடக்கவே நடக்காது. பல மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்தில் ஒரு ஆட்சி கவிழ்ந்தால் அப்போது நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவார்களா? எனவே பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை. ”

காவிரி விவகாரத்தில் கர்நாடகா தண்ணீர் திறக்க மறுப்பது குறித்த கேள்விக்கு

”உச்சநீதிமன்றத்தை மதிக்காத கர்நாடக அரசு சட்டவிரோதமாக செயல்படுகிறது. இன்று மத்தியில் இருக்கும் அரசு அதற்கு உரிய விதத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்.”

மாநாட்டில் முக்கிய அறிவிப்பு வரும் என்று கூறியது குறித்த கேள்விக்கு

”அந்த பேச்சிலேயே இருக்கு.” என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com