
நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தாக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் மழை பெய்தது. சமீபத்தில் கூட தமிழகத்தில் பருவ மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. பின்னர், ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது. அந்தப் புயல் சின்னம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்கு சென்றது.
தெற்கு ஆந்திர கடல் பகுதி மற்றும் வடக்கு கேரளா, கர்நாடக என இரண்டு இடங்களில் மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், நாளை வடகிழக்குப்பருவ மழை துவங்குவதற்கான சூழல் தான் இது என கூறியுள்ளது.
இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் விட்டுவிட்டு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.