
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மீனவர் நலன் - 10 முக்கிய அறிவிப்புகள்
1) மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.5,000லிருந்து ரூ.8,000ஆக உயர்வு
2) மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5,035 பேருக்கு வீடுகளுக்கான பட்டா
3) 45,000 பேருக்கு மீன்பிடித் தொழிலுக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன்
4) தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3, 700 லிட்டராக அதிகரிப்பு
5) காணாமல்போன மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.250லிருந்து ரூ.350ஆக உயர்வு
6) மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகள், தடுப்புச்சுவர்கள்
7) மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் வருவாய் பெற பல்நோக்கு கடல் பாசி பூங்கா
8) மீனவர் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 250 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
9) 1,000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்
10) விசைப்படகுகளுக்கான மானிய விலை டீசல்
இந்த அறிவிப்புகளோடு கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.
தமிழ்நாடு மீனவ சங்கத்தைச் சேர்ந்த கோசு மணியிடம் முதல்வரின் மீனவ நலதிட்டம் குறித்து பேசினோம்
கேள்வி: மீனவர் நல மாநாட்டில் முதல்வர், மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இது குறித்து உங்களின் கருத்து என்ன?
பதில்: ”இது மீனவ சங்கங்களின் மாநாடு என்று கூறினார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எந்த மீனவசங்கத்திற்கும் அழைப்பு கொடுக்கப்படவில்லை. அதனால் இது ஏமாற்றம் அளிக்கக்கூடிய மாநாடு தான். இந்த மாநாட்டில் 936 கோடி மீனவர்களுக்கு ஒதுக்குவதாக கூறியிருப்பது வரவேற்க தக்க ஒன்று என்றாலும், இது எது எதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்ற சரியான விவரம் இல்லை. மழைக்காலங்களில் மீனவர்களுக்கு ரூபாய் 5000 தருவதை 8000 ஆக உயர்த்தி தருகிறோம் என்று சொல்வது வரவேற்கதக்க ஒன்று. ”
”அரசிடம் சொல்வதற்கு எங்களிடம் பல கோரிக்கைகள் உண்டு. ஆனால் அதை அரசு கண்டுக்கொள்வதில்லை. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது எங்களின் நெடு நாள் கோரிக்கை. அதை இன்னும் இந்த அரசு செயல்படுத்தவில்லை” என்றார்.
பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் பேசும் போது:-
கேள்வி: முதலமைச்சரின் முக்கிய உரையில் தமிழகத்தை உலகத்துடன் இணைத்தது கடல், இந்தியாவில் மீன்பிடி தொழிலில் 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தும் பொழுது பாஜக தடுக்கவில்லை என்று பேசிய முதல்வரின் பேசியுள்ளாரே?
பதில்: முதல்வர் கூறுவது முற்றிலும் பொய் . தூக்கு தண்டனை கொடுத்த மீனவர்களை மீட்டுக்கொண்டுவந்தது பாஜக அரசு. பாஜக ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை.
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசும் போது:-
கேள்வி: முதலமைச்சர் மீனவர் மாநாடில் பேசியது குறித்து உங்கள் கருத்து?
பதில்: இது மீனவர் மாநாடு என்று சொல்வதே தவறு. இது தி.மு.க மாநாடு. இவர் இந்த தி.மு.க. மாநாட்டில் கூறுவது அனைத்தும் கட்டுக்கதை. கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க தான். இப்பொழுது நாடகம் ஆடுகிறது. கட்சத்தீவை மீட்போம் என்று ஒரு தீர்மானம் கூட போடவில்லை” என்றார்.