“பாஜக ஆயிரம் வியூகங்கள் வகுக்கலாம்; ஆனால்...” - அதிமுக மாநாட்டில் ஜெயக்குமார் பேச்சு
மதுரையில் அதிமுகவின் வயதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட 51 அடி உயர கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்ற, அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. மேலும் அதிமுக ஆட்சிக்கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாநாட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு விண்ணதிர வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் முக்கிய தீர்மானங்களை இம்மாநாட்டில் நிறைவேற்ற இபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புதிய தலைமுறையிடம் பேசுகையில், “அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்திய இடம் மதுரை. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவால் அங்கீகாரம் செய்யப்பட்டு, அதை உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் 2 கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது அதிமுக.
பாஜகவை பொறுத்தவரை அவர்களது கட்சியை வளர்ப்பதற்கு அவர்கள் 1,000 வியூகங்களை வகுக்கலாம். ஆனால் எங்கள் பலம் என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரியும். திமுகவிற்கும் எங்களுக்கும் கடந்த தேர்தல்களில் 3% வாக்குகள் தான் வித்தியாசம்” என்றார். முழு பேட்டியை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.