
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே நீலமங்கலம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை அப்பகுதி மக்கள் அறையின் உள்ளே வைத்து பூட்டினர்.
சுங்கவரித்துறையில் பணியாற்றி வரும் ஸ்ரீனிவாசன் என்பவர் டெல்லி சென்றதையடுத்து பூட்டியிருந்த அவரது வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.நள்ளிரவு 2 மணி அளவில் நாய் குரைப்பதைக் கேட்ட அப்பகுதி மக்கள், ஸ்ரீனிவாசனின் வீட்டினுள் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ் ஆப் குரூப் மூலம் தகவல் பரிமாறிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து, திருடர்களை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளையர்களை கைது செய்தனர். விசாரணையில் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த ரமேஷ், சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் கொள்ளையர்கள் என தெரிய வந்தது. இருவர் மீதும் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பொதுமக்களின் இந்த செயலை மணிமங்கலம் காவல் துணை ஆய்வாளர் தாமோதரன் வெகுவாக பாராட்டினார்.