
தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருவள்ளுவர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர் மற்றும் கோவை மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், செங்குன்றத்தில் 13 சென்டி மீட்டரும், வால்பாறையில் 11 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.