கீழடி அகழாய்வில் நகர நாகரிகத்தின் சான்றாக வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கெனவே 4 கட்டங்களாக நடந்து முடிந்த அகழாய்வில் பழந்தமிழர்களின் நாகரிகத்துக்கு சாட்சியாக ஏராளமான பொருள்கள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 13-ஆம் தேதி கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின.
அகழ்வாராய்ச்சிக்காக 54 குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில், செங்கல் கட்டுமான சுவர்கள், உறைகிணறுகள், நீர்வழிச்சாலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த சுடுமண் சிற்பங்கள் என, பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்கான 800-க்கும் அதிகமான சான்றுகள் கிடைத்தன. அகழாய்வு நடத்தப்படும் பகுதிகளை சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.
இந்நிலையில், கீழடி அகழாய்வில் நகர நாகரிகத்தின் சான்றாக வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தொல்லியல் துறை, ''சுடுமண்ணால் தயாரிக்கப்பட்டுள்ள குழாய்களானது ஒன்றோடொன்று பொருத்தப்படும் வகையில் உள்ளன.
குழாய்கள் 60செமீ நீளமும், குழாயின் வாய்ப்பகுதி 20செமீ விட்டமும் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளது. மேலும், சுருள் வடிவிலான சுடுமண் குழாயின் கீழே பீப்பாய் வடிவிலான 3 சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில் கண்டறியப்பட்டது. இரண்டு குழாய்களும் மேலும் கீழுமாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
இவை வடிவம் மற்றும் அளவுகளில் மாறி இருப்பதால் தனித்தனி பயன்பாட்டுக்கு பயன்பட்டிருக்க வேண்டும். கீழடுக்கு பீப்பாய் வடிவிலான குழாயின் நுழைவுப்பகுதியில் வடிகட்டி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த வடிகட்டி மூலம் திரவப்பொருட்கள் அல்லது நீர் வடிகட்டப்பட்டிருக்கலாம்.
வடிகால் அமைப்பு, பீப்பாய் வடிவிலான சுடுமண் குழாய், சுருள் வடிவிலான குழாய்கள் இவையெல்லாம் சங்ககால மக்கள் நீர் மேலாண்மையில் எத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளனர் என்பதை நம் முன்னே காட்டுகிறது. இந்த சான்றுகளே வைகை நதிக்கரையில் நகர நாகரிகம் சிறப்புற்று விளங்கியதற்கு மேலும் வலுவூட்டுகின்றன'' என குறிப்பிட்டுள்ளது.