தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை எப்படி தள்ளிப் போடலாம் என்பதிலேயே குறியாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே நிர்ப்பந்தங்களைப் பொருட்படுத்தாமல் உயர் நீதிமன்ற ஆணைப்படி விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை தேவை என்று தேர்தல் ஆணையத்தை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவிற்குள் நடக்கும் உட்கட்சி சண்டை காரணமாகவே தேர்தல் தாமதிக்கப்படுகிறதோ என சந்தேகம் அனைவருக்கும் எழுவதாகவும் ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.