
சிஏஏ மற்றும் என்ஆர்சி என்றால் என்ன ? என்பதை புரிந்துகொண்டு முதலமைச்சர் பேச வேண்டும் என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிஏஏ, என்ஆர்சி என்ன என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். குடிமக்கள் பதிவேடு துவங்கும் போது பிரச்சனைகளும் துவங்கும். சிஏஏ அரசியலமைப்புக்கு எதிரானது. இது இன்று பாதிக்குமா ? நாளை பாதிக்குமா ? என்பதை கடந்து, அரசியலமைப்பை கொச்சைப்படுத்தும் சட்டம். என்.ஆர்.சி கொண்டுவந்த பிறகு மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு எதிராக திமுக மட்டுமே போராட்டம் நடத்தவில்லை. இந்தியா முழுக்க போராடுகின்றனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இன்று சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிஏஏவால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறுமாறு திமுகவைப் பார்த்து வினவினார்.
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். சிஏஏ தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும், அதனை திரும்பப்பெறும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.