
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், கருணாநிதி நலமோடு இருப்பதாக தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று இரவு சந்தித்து நலம் விசாரித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், கருணாநிதி நலமோடு இருப்பதாக தெரிவித்தார். அதேபோல செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ இந்த சந்திப்பு ஒரு அரசியல் பண்பாட்டின் வெளிப்பாடு. ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த போது திமுகவினர் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். அதேபோல நாங்களும் நலம் விசாரிக்க வந்தோம். அனைவரிடமும் பேசினோம். திமுக தலைவர் கருணாநிதி எங்களை அடையாளம் கண்டு கொண்டார், விரைவில் குணமடைந்து நலம் பெறுவார்” என்றார்.