திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு
புரட்டாசி மாதம் என்பதாலும், வார விடுமுறை நாள் என்பதாலும் திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்துக்கான 31 அறைகளும் நிரம்பியதால், சுவாமி தரிசனத்துக்கு சுமார் 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகரித்தது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், நாளை மறுநாள் விடுமுறை நாள் என்பதாலும், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் பலர் வெட்ட வெளியேலேயே தங்க நேரிட்டது.
மேலும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள இலவச தரிசனத்துக்கான 31 அறைகளும் நிரம்பி வழிந்ததால், சுவாமி தரிசனத்துக்கு 20 மணி நேரத்துக்கு மேலானது. ஒரே நாளில் மட்டும் 66 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கை மட்டும் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் சேர்ந்திருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுவதை அடுத்து, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.