
இந்திய வரலாற்றிலேயே தமிழ் மொழியை மேற்கோள் காட்டி ஐ.நா.வில் பேசிய ஒரே பிரதமர் மோடிதான் என முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
சேலம் வீரபாண்டியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைத்தீர் முகாமில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருவதாக கூறினார். வேளாண்மைக்கு மட்டுமின்றி, அது சார்ந்த தொழில்களில் ஈடுபடவும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். அதிமுக அரசு நதிநீர் பிரச்னைகளை தீர்க்கவில்லை என கூறும் திமுகவின் ஆட்சிக்காலத்தில் எந்த பிரச்னை தீர்க்கப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிக ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அவர் சொந்த தொகுதியிலுள்ள பாலாறு பிரச்னையைக் கூட தீர்க்கவில்லை என்றார். இந்திய வரலாற்றிலேயே தமிழ் மொழியை மேற்கோள் காட்டி ஐ.நா.வில் பேசிய ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான் என முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். ஐ.நா.சபையில் புறநானூறு பாடலை சுட்டிக்காட்டி பேசி தமிழின் பெருமையையும், வரலாற்றையும் உலகம் அறிய செய்துள்ளதாகவும் அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.