
வைணவ ஆழ்வார்களில் ஒருவரான தூப்புல் வேதாந்த தேசிகருக்கு காஞ்சிபுரம் விளக்கொளி கோவில் தெரு பகுதியில் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரணவ நட்சத்திரத்தை ஒட்டி வேதாந்த தேசிகர் வரதராஜ பெருமாள் கோயில் அருகே எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருவது பழக்கம்.
இந்நிலையில் வேதாந்த தேசிகர் சுவாமி விதிஉலா வந்த போது வரதராஜ பெருமாள் கோவில் அருகே சன்னதி வீதியில் எழுந்தருளிய போது வடகலை தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர். அப்போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகக் கூறி வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகர் முன்பு பிரபந்தம் பாட எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உடனடியாக விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்ற நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தென்கலை பிரிவினர் வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டுமே பாடுவதற்கு தடை மற்றும் வழக்கு உள்ளதாகவும் வெளி பகுதிகளில் பாடுவதற்கு தடை இல்லை என தென்கலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சன்னதி வீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சுவாமி ஊர்வலம் முன்பு பாடுவதற்கு காவல் துறையினரும் இந்து சமய அறநிலைத் துறையிரும் அனுமதி அளித்த பின்பு தேசிகர் சுவாமி விதிஉலா போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.