தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 26ஆம் தேதியையொட்டி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 22 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.