
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் மழை நிலவரம் தொடர்பாக கூறியதன்படி அக்டோபரில் மிகவும் குறைவாகவே மழை பெய்துள்ளது. வழக்கமாக அக்டோபர் மாத இறுதியில் இருந்தே வேகமெடுக்கக் கூடிய மழை, இப்போதுதான் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
கடலில் இருந்து நிலப் பகுதிக்கு வரும் காற்றின் வெப்பநிலை, நிலப் பகுதியில் உள்ள வெப்பநிலை வேறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிக மழை பொழிவை ஏற்படுத்தும் காரணிகள் இல்லை என்றாலும் பரவலாக பருவமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
“சென்னையில் மழை தொடர்ந்து விட்டுவிட்டு பெய்யும். அவ்வப்போது பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது” என்று கூறும் வானிலை ஆய்வு மையம், இந்த நிலை வரும் ஆறாம் தேதி வரை தொடரும் என்றும் கூறியுள்ளது.