மதுரை வலையங்குளத்தில் வரும் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநாட்டிற்கான பணிகளை ஆய்வு செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதாவிற்கு சட்டப்பேரவையில் அநீதி நிகழவில்லை. அது அவரே நடத்திக்கொண்ட நாடகம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்ததை மறுப்பு தெரிவித்தார். மேலும், அப்போது என்ன நடந்தது என்பது பற்றி முழு விளக்கமும் அளித்தார்.
இதுகுறித்து எடப்பாடி பேசுகையில், “1989ஆம் ஆண்டில் ஜெயலலிதாவை திமுகவினர் அவமதித்தது உண்மை. சட்டப்பேரவையில் பெண் என்றும் பாராமல் கொடூரமான முறையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் நடந்தபோது நானும் பேரவையில் இருந்ததால் அந்த முறையில் இதைக் கூறுகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஜெயலலிதா மீது அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தாக்குதல் நடந்தது.
1989ல் பேரவையில் ஜெயலலிதா சேலையை தற்போதுள்ள மூத்த அமைச்சர் பிடித்து இழுத்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு நடந்த அவமரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது கொச்சைப்படுத்தி கூறுகிறார். சேலையையும், முடியையும் பிடித்து இழுத்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முக ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருப்பதை பொய் என்று கூறியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “1989ஆம் ஆண்டில் ஜெயலலிதாவை திமுகவினர் அவமதித்தது உண்மை. ஆனால் அதை மறைக்கும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசியிருக்கும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ராமன், “1989ல் தமிழ்நாடு சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா கண்ணீருடன் வெளியே வந்த சம்பவம் உண்மை. அப்படி நடக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது பொய்” என்று தெரிவித்துள்ளார்.