தமிழகத்தில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துச் சந்தித்தது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன. அதேநேரத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - அதிமுகவினருக்கு இடையே சற்று மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையியில் இன்று (செப்.25) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ’பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுகுறித்த அதிரடி அறிவிப்பும் ஊடகங்களில் வெளியாக இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தவிர, இதுகுறித்த செய்தித் தொகுப்புகளை இணையங்களில் வலம் வருகிறது. அதிலும் அதிமுகவினர், கடந்த காலத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாஜக கூட்டணி முறிவு குறித்துப் பேசிய வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். அதில் அவர், “இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஓர் உத்தரவாதத்தை அளிக்கிறேன். முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். பாஜகவோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு என்றைக்கும் உண்டு. அந்த தவறுக்கு பரிகாரமாகத்தான் நானே பாஜக ஆட்சியைத் கவிழ்த்தேன். இனி, எந்தக் காலத்திலும் பாஜகவோடு அதிமுக எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது” எனப் பேசியுள்ளார். இந்த வீடியோவைத்தான் அதிமுகவினர் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அதேபோல, இன்றைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியில் எடப்பாடி பழனிசாமியும் அதிரடி முடிவு எடுத்திருப்பதால், பல அரசியல் தலைவர்களும் அவரது கருத்தை வரவேற்று வருகின்றனர். இன்னும் சிலரோ, ஜெயலலிதாவுடனும் அவரை ஒப்பிட்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், ’மீண்டும் கூட்டணிக்கு வரவேண்டாம்’ என பாஜகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் 'நன்றி மீண்டும் வராதீர்கள்'என்ற ஹேஷ்டேக்கை அதிமுக பதிவிட்டுள்ளது. ஜெயலலிதா பேசிய வீடியோவைப்போல், இந்த ஹேஷ்டேக்கும் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அரசியல் டிரெண்டிங் பகுதியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.