
காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்தவரை, குழந்தை பிறந்த பின் காதலி கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சாத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரி(22). கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (20). இவர்கள் இருவரும் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் ராஜலட்சுமி கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அரியிடம், ராஜலட்சுமி கேட்டுள்ளார். தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறி திருமணம் செய்ய அரி மறுத்து வந்துள்ளார்.
இதை தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குழந்தை பிறந்தது. இதையறிந்த அரி குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு குழந்தையை பார்த்த பிறகு மனம் மாறி ராஜலட்சுமியை உடனடியாக திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு ராஜலட்சுமிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.