
கேப்டன் பொறுப்பில் விராத் கோலியின் ஸ்டைலை பின்பற்ற விரும்புகிறேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள, தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சொன்னார்.
ஐபிஎல் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார், தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் காலிஸின் கீழ் பயிற்சி பெற ஆவலாக இருக்கிறேன். பேச்சை விட செயல்பாட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் விராத் கோலியின் ஸ்டைலை பின்பற்ற இருக்கிறேன். அவர் ஆக்ரோஷமான கேப்டன். ஆக்ரோஷமான சுபாவம் எனக்கு இயல்பாகவே கிடையாது. அதற்காக எனக்குள் ஆக்ரோஷம் இல்லை என்று நினைக்க வேண்டாம். அணியில் குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, சுனில் நரேன் என மூன்று ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஜூனியர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் கம்லேஷ் நாகர்கோட்டி, சிவம் மவி ஆகியோரும் இருக்கிறார்கள். மேலும் சிறந்த வெளிநாட்டு வீரர்களும் இருக்கிறார்கள். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அணியின் கலவை சிறப்பாகவே இருக்கிறது’ என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறும்போது, ‘தினேஷ் கார்த்திக் போன்ற அனுபவ வீரர் அணிக்கு கேப்டனாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. ராபின் உத்தப்பா துணை கேப்டனாக செயல்படுவார். இரண்டு பேருமே அணியை சிறப்பாக வழி நடத்துவார்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.