
சிஎஸ்கே அணியுடனான ஆட்டத்தில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா அவுட்டானவிதம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே - மும்பை அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. 140 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே 17.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக டேவன் கான்வே 42 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்தார்.
ஷிவம் துபே 18 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி 2 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வீரர்கள் மிகவும் நிதானமாக விளையாடி வெற்றியை பதிவு செய்தனர். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். மேலும் அவர் ஸ்கூப் ஷாட் போன்ற ஒன்றை அடிக்க முயன்ற அவுட்டான முறை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்வகர் "அவர் நேற்றைய ஆட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாரரா என தெரியவில்லை. நான் நினைத்து தவறாகக்கூட இருக்கலாம்.ஆனால் நேற்று அவர் ஆடிய ஷாட் ஒரு பொறுப்புள்ள கேப்டனுக்கானது இல்லை. தன்னுடைய அணி தடுமாறிக்கொண்டு இருக்கும்போது, கேப்டன் என்பவர் அணியை மீட்கும் வகையில் விளையாட வேண்டும். ஆனால் அவரோ ஒரு மோசமான ஷாட் ஆடி அவுட்டானார். அதுவும் பவர்பிளேவில் 2 விக்கெட் இழந்தபோதும், நீங்கள் மோசமான ஃபார்மில் இருக்கும்போதும்" என்றார் அவர்.
மேலும் பேசிய அவர் "நீங்கள் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கும்போது ஸ்கூப் ஷாட் ஆடுவதில் தவறறில்லை. ஆனால் முந்தையப் போட்டியில் டக் அவுட்டான பின்பும் இதனைத் தொடர்வது வருத்தமாக இருக்கிறது. இப்போது நீங்கள் கொஞ்சம் ரன்களைச் சேர்க்க வேண்டும், அப்போதுதான் அவை கால்களுக்கும் மனதுக்கும் பலத்தைத் தரும். கொஞ்சம் பெரிய ரன்களை அடித்த பின்பு சில ஷாட்களை முயற்சிக்கலாம். அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என நினைக்கிறேன். இது குறித்து மும்பை அணி நிர்வாகம்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும்"என்றார் சுனில் கவாஸ்கர்.