
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனியின் கேப்டன்சிக்கும் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனின் கேப்டன்சிக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் ரவி சாஸ்திரி கூறுகையில், ''தோனிக்கு நிகரான குணங்கள் சஞ்சு சாம்சனிடம் உள்ளது. நான் சஞ்சு சாம்சனை ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கிறேன். எனக்கு தெரிந்த வரையில் அவர் மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் செயல்படுகிறார். அதை அவர் வெளிப்படுத்தாவிட்டாலும், சஞ்சு தனது வீரர்களுடன் நல்ல தொடர்பை வைத்திருக்கிறார். அவர் எதையும் அனுபவத்துடன் கற்றுக்கொள்கிறார்.
சஞ்சு சாம்சனுக்குள் ஒரு உள்ளார்ந்த தலைவர் இருக்கிறார். ஆனால் அவர் கடைசி இரண்டு ஆட்டங்களில் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும் நீங்கள் பார்க்கலாம். அதை அவர் சொல்லாவிட்டாலும், பார்க்கும்போது நம்மால் புரிந்து கொள்ளலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் முயன்றிருந்தால் சில ஆட்டத்தை வென்றிருக்க முடியும்" என்று ரவி சாஸ்திரி கூறினார்.
நடப்பு சீசனில் 8 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அணி தனது அடுத்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது.