மழையின் விளையாட்டால் மாறிப்போன ஆட்டங்கள்! சுவாரஸ்யமான 5 போட்டிகள்!

கிரிக்கெட் போட்டியின்போது இதுபோன்று மழை வந்து குறுக்கிட்டு ஆட்டத்தை மாற்றிய சில சுவாரஸ்ய சம்பவங்களை இங்கு காண்போம்.
heavy rain
heavy raintwitter page

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு நடப்பு ஐபிஎல் சீசனில் பெரும்பாலான பரபரப்புக்கும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இறுதிப் போட்டியிலும் அதே பரபரப்பும், திக் திக் நொடிகளும் இருக்கும் என ரசிகர்கள் நேற்றும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், மைதானத்தில் திரண்டிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள், நேரலையில் காண காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களையும் மழை ஏமாற்றி விட்டது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி தொடர்ந்து கனமழை பெய்ததால் ஆட்டம் ரிசர்வ் டேவான இன்று மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போட்டி தோனிக்கு 250வது ஐபிஎல் போட்டி ஆகும். ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியும் ரிசர்வ் நாளாக செல்வதைக் கண்டு, சென்னை அணி ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இது ஒருபுறமிருக்க, கிரிக்கெட் போட்டியின்போது இதுபோன்று மழை வந்து குறுக்கிட்டு ஆட்டத்தை மாற்றிய சில சுவாரஸ்ய சம்பவங்களை இங்கு காண்போம்.

1 பந்தில் 21 ரன்கள்.. மழையால் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த சோதனை!

கடந்த 1992ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. அதாவது, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 252/6 எடுத்தது. பின்னர் தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 231/6 ரன்களை எட்டியபோது, ​​மழை பெய்யத் தொடங்கியது. அப்போது அவர்கள் கையில் 4 விக்கெட்கள் இருந்தது. பின்னர், மழை நின்ற பிறகு 2 ஓவர்கள் கழிக்கப்பட்டது. அதாவது, தென்னாப்பிரிக்காவுக்கு முதலில் 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டது. மழையினால் அதில், 2 ஓவர்கள் கழிக்கப்பட்டதால் (12 பந்துகள்) மீதி ஒரே ஒரு பந்து மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த ஒரு பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தென்னாப்பிரிக்கா தள்ளப்பட்டது. 1 பந்தில் 21 ரன்கள் எடுக்க முடியாததால் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்காக விதிமுறைகள் மாற்றப்பட்டதாக சர்ச்சை வெடித்து நினைவுகூரத்தக்கது. அதாவது ஓவர்களைக் குறைத்ததுபோல ரன்களையும் குறைத்திருக்க வேண்டும். ஆனால், இதில் அப்படி செய்யாததால் சர்ச்சை எழுந்தது.

தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை... கோப்பையைப் பகிர்ந்த இந்தியா - இலங்கை!

கடந்த 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியா, 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடும் மழை பெய்தது. இதன் காரணமாக, ரிசர்வ் டே ஆட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து, ஆட்டம் மறுநாள் (செப்.30) நடைபெற்றது. அப்போது முதலில் பேட் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இந்தியா 8.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து, ஆட்டம் கைவிடப்பட்டதுடன், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது.

டக்வொர்த் விதியால் மாறிய ஆட்டம்..

கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. பின்னர் வெற்றியை நோக்கி ஆடிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு சோதனையாக மழை குறுக்கிட்டது.

இதையடுத்து அந்த அணி, டக்வொர்த் விதிப்படி 45 ஓவர்களில் 230 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில், மைதானத்தில் ஒளிபரப்பான திரையில் Par score 6 ரன்கள் எனக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைப் பார்த்த மார்க் பவுச்சர் 6 ரன்கள் தான் வெற்றிக்கான இலக்கு என நினைத்துள்ளார். முத்தையா முரளிதரன் வீசிய அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து 229 ரன்களை எட்ட வைத்தார். இதையடுத்து வெற்றி பெற்றுவிட்டோம் என்று நம்பி ஆர்பரித்தார். ஆனால், அடுத்த பந்தில் ரன் எடுக்க வேண்டும் என அப்பொழுதுதான் அவருக்கு தெரியவந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஆனால், கடைசி பந்தில் அந்த ஒரு ரன்னை எடுக்க முடியவில்லை. இதனால் போட்டி டையில் முடிந்தது.

மழையால் ஓவர்கள் குறைப்பு.. வெற்றிபெற்ற இந்திய அணி!

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் 50 ஓவர்கள் கொண்ட போட்டி 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. மழையின் காரணமாக, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி, 5 ரன்களில் திரில் வெற்றியைப் பெற்றது.

2 நாட்கள் பெய்த மழை.. தோனியை ஓய்வுபெற வைத்த போட்டி!

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது கடுமையாக மழை பெய்ததை அடுத்து போட்டி தடைப்ப்படது. இதையடுத்து அந்தப் போட்டி, ரிசர்வ் டேவான அடுத்த நாளுக்கு

மாற்றப்பட்டது. பின்னர் மறுநாள் ஆடிய நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் டோனி 50 ரன்கள் எடுத்து ரன் அவுட்டில் வெளியேறினார். இந்த போட்டி முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் உலகக்கோப்பையை வென்று இருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com